உடுமலையில் வீடு தீப்பிடித்ததில் மூச்சுத்திணறி தபால் அதிகாரி பலி - காயமடைந்த மனைவி, 2 மகன்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி


உடுமலையில் வீடு தீப்பிடித்ததில் மூச்சுத்திணறி தபால் அதிகாரி பலி - காயமடைந்த மனைவி, 2 மகன்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 18 Nov 2020 10:30 PM IST (Updated: 18 Nov 2020 10:00 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் தபால் அதிகாரி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த அவரது மனைவி, 2 மகன்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உடுமலை,

திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 57). இவர் உடுமலையை அடுத்த புங்கமுத்தூர் கிராமத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெயந்தி (56). இவர் உடுமலை சதாசிவம் வீதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன்கள் பிரதீப் (27), பிரவீன் (25).

இந்த நிலையில் நேற்று காலை இவர்களது வீட்டில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடுமலை போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அதிகாரி ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்தனர். அப்போது ராஜன் வீட்டின் படுக்கையறையில் இருந்த கட்டில், மெத்தை மற்றும் ஹாலில் இருந்த நாற்காலிகள் ஆகியவை தீயில் எரிந்து கொண்டிருந்தன. மேலும் ராஜன், ஜெயந்தி, பிரதீப் மற்றும் பிரவீன் ஆகியோர் மயக்க நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அப்போது வீடு முழுவதும் புகை மூட்டமாக இருந்துள்ளது. உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விட்டு தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

இதற்கிடையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மூச்சு திணறலால் இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவரது மனைவி ஜெயந்தி, மகன்கள் பிரதீப், பிரவீன் ஆகியோருக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் ராஜனின் வீட்டிற்கு விரைந்து வந்து தீப்பிடித்தது எப்படி? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயந்தி மற்றும் அவர்களுடைய மகன்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜன் பணியாற்றி வந்த புங்கமுத்தூர் தபால் அலுவலகம் தினமும் காலை 9 மணிக்கு திறக்கப்படும். அலுவலகம் திறந்தது குறித்து தலைமை தபால் அலுவலகத்திற்கு தினசரி தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் நேற்று புங்கமுத்தூர் தபால் அலுவலகத்தில் பணியாற்றிவரும் ஊழியர்கள் பணிக்கு வந்திருந்த நிலையில் தபால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் வெளியில் காத்திருந்தனர்.

இதுகுறித்து ஊழியர்கள் தலைமை தபால் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் ராஜன் வீட்டில் நடந்த சம்பவம் குறித்து நீண்ட நேரத்திற்கு பிறகு உடுமலை தலைமை தபால் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

Next Story