வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ.1.20 கோடியில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் கட்டுமானப்பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ.1.20 கோடியில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் கட்டுமானப்பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் யூனியனுக்குட்பட்ட வீரபாண்டியன்பட்டினம் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. தூண்டில் வளைவு அமைக்கப்பட்ட போதிலும் சில இடங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனால் மேலும் கடல் அரிப்பு ஏற்படுவதை தவிர்க்க தூண்டில் வளைவு அமைக்கப்பட்ட இடத்தில், கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்க முதல்-அமைச்சர் கூடுதலாக ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த தடுப்புச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை வீரபாண்டியன்பட்டினம் கடற்கரையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.
அமைச்சர் பேட்டி
பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மீனவர் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துபவர். கடற்கரை பகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். குறிப்பாக நமது மாவட்டத்தில் பெரியதாழை வரை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தற்போது வீரபாண்டியன்பட்டினத்தில் கடல் அரிப்பை தடுக்க கூடுதலாக ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கி அதற்கான பணியை இன்று (அதாவது நேற்று) தொடங்கி உள்ளோம். இதேபோல் நபார்டு திட்டத்தின் கீழ் பெரியதாழையில் ரூ.30 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படவுள்ளது. ஆலந்தலையில் ரூ.40 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள தூண்டில் வளைவிற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து சுற்றுசூழல் துறை அனுமதிக்காக அனுப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் விரைவில் பணி தொடங்கப்படும். இவ்வாறு மீனவ மக்களின் நலனில் அக்கறையோடு பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல் படுத்தி வருகிறார்’ என தெரிவித்தார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ, சின்னப்பன் எம்.எல்.ஏ. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, யூனியன் தலைவி செல்வி வடமலைபாண்டியன், துணை தலைவர் ரெஜிபர்ட் பர்னாந்து, யூனியன் ஆணையர் ராமராஜ், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய கழக செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர்பழக்கடை திருப்பதி, மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பூந்தோட்ட மனோகரன், வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணை தலைவர் ஜெகதீஸ் வீ ராயர், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லெட்சுமன பெருமாள், உடன்குடி ஒன்றிய செயலாளர் தாமோதரன், நகர செயலாளர்கள் மகேந்திரன், செந்தமிழ் சேகர், காயல் மவுலானா, ஊர்நல கமிட்டி தலைவர் சேவியர் வி ராயர், செயலாளர் கிங் வி ராயர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story