கர்நாடக அரசின் இணையதளத்தை முடக்கியவர் கைது வங்கி கணக்குகளில் இருந்து பணம் சுருட்டியதும் அம்பலம்
கர்நாடக அரசின் இணையதளத்தை முடக்கி வந்தவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் வங்கி கணக்குகளில் இருந்து பணம் சுருட்டியதும் அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள தபால் நிலையத்திற்கு கடந்த 4-ந் தேதி கூரியர் மூலமாக வந்த பார்சலில் 500 கிராம் ஹைட்ரோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டார்க்நெட் இணையதளம் மூலமாக வெளிநாட்டில் இருந்து ஹைட்ரோ கஞ்சா வரவழைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சதாசிவநகரை சேர்ந்த சுஜய், சுனேஷ், பிரசித் ஷெட்டி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுனேசும், பிரசித் ஷெட்டியும் நெருங்கிய உறவினர்கள் என்று தெரிந்தது.
மேலும் சுஜய், சுனேஷ், பிரசித் ஷெட்டி மற்றும் ஜெயநகரை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்ற ஸ்ரீரகி என்பவருடன் சேர்ந்து சஞ்சய்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து போதைப்பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. டார்க்நெட் மூலமாக அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி விற்றதுடன், அவர்கள் பயன்படுத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஸ்ரீகிருஷ்ணாவை கைது செய்து விசாரித்ததில், அவர் போதைப்பொருட்கள் விற்பனை தவிர இணையதளங்களை முடக்கி பணம் சுருட்டி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்தும் நபர்களை கைது செய்வதில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக டார்க்நெட் மூலமாக போதைப்பொருட்களை ஆர்டர் செய்து, அவற்றை கூரியர் மூலமாக பெங்களூருவுக்கு கொண்டு வந்து விற்கும் கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, போதைப்பொருள் விற்பனை மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்தி வந்த கும்பல்கள் கொடுத்த தகவல்களின் பேரில் ஜெயநகரை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது தொழிலேயே இணையதளங்களை முடக்குவது தான். மடிக்கணினி மூலமாக இணையதளங்களை முடக்கி, பல்வேறு வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை பரிமாற்றம் செய்து ஸ்ரீகிருஷ்ணா மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளை சேர்ந்த இணையதளங்களையும் ஸ்ரீகிருஷ்ணா முடக்கி தகவல்களை திருடுவது, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த ஆண்டு (2019) கூட கர்நாடக அரசுக்கு சொந்தமான இணையதளத்தை ஸ்ரீகிருஷ்ணா முடக்கி இருந்தார். இதுதவிர சில இணையதளங்களை முடக்கி, அவற்றின் உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலிக்கும் சம்பவங்களிலும் அவர் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. சீனாவை சேர்ந்த ஒரு இணையதளத்தை ஸ்ரீகிருஷ்ணா, சுஜய், சுனேஷ், பிரசித் ஷெட்டி உள்ளிட்டோர் சமீபத்தில் முடக்கி இருந்தார்கள்.
அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்த பல லட்சம் ரூபாயை, தங்களது வங்கி கணக்குக்கு மாற்றியும் மோசடி செய்தது தெரியவந்தது. குறிப்பாக இணையதளங்களில் பிட் காயின் மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனைகளை முடக்கி, அந்த பிட் காயின் மூலமாக டார்க்நெட் மூலமாக போதைப்பொருட்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது.
கைதான ஸ்ரீகிருஷ்ணா நெதர்லாந்தில் கம்ப்யூட்டர் அறிவியல் படித்திருந்தார். இதனால் அவருக்கு இணையதளங்களை முடக்குவது பற்றி நன்கு தெரிந்தது. இணையதளங்களை முடக்கி பணம் பரிமாற்றம் செய்த பின்பு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சிக்கமகளூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று போதைப்பொருட்கள் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
கைதான ஸ்ரீகிருஷ்ணாவிடம் இருந்து ஒரு மடிக்கணினி, விலை உயர்ந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போதைப்பொருள் விற்பனை தொடர்பாக விசாரித்து வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், திறமையாக விசாரணை நடத்தி இணையதளங்களை முடக்கி பணம் சம்பாதிப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story