ஹாசனாம்பாதேவி கோவில் உண்டியலில் கிடந்த பக்தர்களின் நூதன வேண்டுதல் கடிதங்களால் பரபரப்பு
ஹாசனில் உள்ள ஹாசனாம்பாதேவி கோவில் உண்டியலில் பக்தர்களின் நூதன வேண்டுதல் கடிதங்கள் கிடந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹாசன்,
ஹாசன் டவுனில் பிரசித்தி பெற்ற ஹாசனம்பா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலின் சிறப்பு அம்சமே, ஆண்டுக்கு ஒரு முறை 10 நாட்கள் மட்டுமே கோவில் நடை திறக்கப்படுவது ஆகும். அதுவும் தீபாவளியையொட்டி தான் இக்கோவில் நடை திறக்கப்படும். ஒரு ஆண்டுக்கு இந்த கோவிலில் ஏற்றப்படும் தீபம் அணையாமல் இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். அத்துடன் கோவிலில் சாமிக்கு அணிவிக்கப்படும் பூமாலை வாடாமல் இருப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
இத்தகைய சிறப்புவாய்ந்த ஹாசனாம்பா தேவி கோவில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 16-ந்தேதி வரை கோவில் நடை திறக்கப்பட்டு இருந்தது. இதில் 10 நாட்கள் மட்டுமே கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஆன்-லைனில் கோவில் நிகழ்ச்சிகள் ஒளிபரபரப்பு செய்யப்பட்டது.
அதாவது கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே வேளையில் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இருப்பினும் கோவிலுக்குள் செல்லாமல் வெளியே நின்றே ஏராளமானோர் ஹாசனாம்பா தேவியை தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் ஹாசனம்பாதேவி கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் எண்ணப்பட்டன. அதில் பலர் குடும்ப பிரச்சினை, கடன் தீர்வு, நிதி பிரச்சினை குறித்தும், நல்ல வேலை, திருமண வரம், குழந்தை வரம் கேட்டும், கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும் கேட்டு கோவில் உண்டியலில் கடிதங்கள் கிடைத்தன. அதுபோல் ஒரு பெண் பக்தை, ஹாசனாம்பா தேவிக்கு எழுதிய கடிதத்தில் எனது கணவர் மாலையில் கொஞ்சமாக மது குடிப்பார். அவர் குடிப்பழக்கத்தை கைவிட அருள்புரிய வேண்டும் என்று குறிப்பிட்டு நூதன வேண்டுதலை வைத்துள்ளார்.
மற்றொரு பெண், எனது கணவர் மது குடிப்பதை விட்டுவிட்டார். எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று கடிதம் எழுதி உண்டியலில் போட்டுள்ளார். இவ்வாறு கோவில் உண்டியலில் பக்தர்களின் நூதன வேண்டுதல் கடிதங்கள் கிடந்தன. இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டன.
மேலும் கடந்த 10 நாட்கள் வருவாயாக கோவிலுக்கு ரூ.22 லட்சத்து 79 ஆயிரத்து 772 கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 10 நாட்களில் மட்டும் ரூ.3 கோடி உண்டியல் வருவாயாக கிடைத்தது. ஆனால் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் நடப்பாண்டு கோவிலில் உண்டியல் வருவாய் குறைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story