துருவகெரேயில் பரிதாபம்: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை வீடியோவில் மனைவி, மாமியார் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
துருவகெரேயில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் மனைவி, மாமியார் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
துமகூரு,
துமகூரு மாவட்டம் துருவகெரே தாலுகா ரங்கனஹள்ளி டவுனில் உள்ள போவி காலனியை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 30). இவருக்கு திருமணம் ஆகி ஹேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஹேமாவுக்கு சேத்தன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த லோகேஷ் அவரை கண்டித்துள்ளார்.
ஆனால் ஹேமாவுக்கு துணையாக ஹேமாவின் தாய் தனலட்சுமி, தந்தை ராஜூ ஆகியோரும் இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக லோகேசுக்கும், ஹேமாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஹேமாவின் பெற்றோரும், கள்ளக்காதலன் சேத்தனும் சேர்ந்து லோகேசை தாக்கி வந்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த லோகேஷ் கடந்த 15-ந்தேதி பூச்சி கொல்லி மருந்து (விஷம்) குடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது செல்போனில் ஒரு வீடியோவில் மனைவி, மாமியார் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுயுள்ளார்.
அந்த வீடியோவில் லோகேஷ், எனது சாவுக்கு எனது மனைவி ஹேமா, மாமியார் தனலட்சுமி, மாமனார் ராஜூ, ஹேமாவின் கள்ளக்காதலன் சேத்தன் ஆகியோர் தான் காரணம். அவர்கள் என்னை துன்புறுத்தி வந்ததுடன், என்னிடம் இருந்து பணம் பறித்து வந்தனர். மேலும் அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இதனால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. அதனால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொள்கிறேன். எனது சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உருக்கமாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தாமதமாக தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக துருவகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் ஹேமா, அவரது பெற்றோர், காதலன் மீது இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எங்களது மகன் சாவுக்கு நீதிகிடைக்க வேண்டும் என்றும் லோகேசின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story