2021-22-ம் ஆண்டில் வங்கிகள் மூலம் ரூ.3,457 கோடி கடன் உதவி வங்கியாளர் குழு கூட்டத்தில் முடிவு


2021-22-ம் ஆண்டில் வங்கிகள் மூலம் ரூ.3,457 கோடி கடன் உதவி வங்கியாளர் குழு கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 19 Nov 2020 10:01 AM IST (Updated: 19 Nov 2020 10:01 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் 2021-22-ம் ஆண்டு வங்கிகள் மூலம் ரூ.3,457 கோடியே 14 லட்சம் கடன் வழங்க வாய்ப்பு உள்ளது என்று வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

வங்கிகளின் செயல்திறனை மறுஆய்வு செய்வது குறித்து மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் 2-வது ஆலோசனை கூட்டம் அக்கார்டு ஓட்டலில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

கொரோனா தொற்று நோயால் புதுவையில் நின்றுபோன பொருளாதாரத்தை மீட்க கூடுதல் கடன்களை வங்கிகள் வழங்க வேண்டும். மாநிலத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யவேண்டும். அப்போது தான் பொதுமக்களிடம் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதன் மூலம் மாநிலத்தில் வரி வருவாய் அதிகரிக்கும். வங்கிகள் வியாபாரிகளுக்கு கடன்கள் வழங்கும் போது சிறு வியாபாரிகள் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கும். எனவே வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும். புதுவை மாநில வளர்ச்சியை உறுதிப்படுத்த வீட்டுக்கடன்களும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியன் வங்கியின் தலைமை அலுவலக செயல் இயக்குநர் பட்டாச்சார்யா பேசும் போது, ‘இன்றைய உலகளாவிய பொருளாதார சூழ்நிலை, இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் புதுச்சேரியின் வளர்ச்சியில் வங்கிகளின் செயல்திறன் ஆகியவற்றை விளக்கி கூறினார்.

இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் செந்தில்குமார், அரசுத்துறை பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை செயலாளர் பத்ம ஜெய்ஸ்வால், வீட்டு வசதித்துறை செயலாளர் மகேஷ், இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை கிளை தலைமை பொது மேலாளர் எஸ்.எம்.என். சுவாமி, நபார்டு வங்கி துணை பொதுமேலாளர் ஸ்ரீபதி கல்குரா, இந்தியன் வங்கி சென்னை கார்பரேட் அலுவலக பொதுமேலாளர் தன்ராஜ், மாவட்ட மேலாளர் உதயகுமார் மற்றும் வங்கிகளின் முதன்மை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

நபார்டு வங்கி தயாரித்த திட்டத்தின் படி புதுவை மாநிலத்தில் 2021-22ம் ஆண்டு ரூ.3,457 கோடியே 14 லட்சம் வங்கிகள் கடன் வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வங்கிகளின் செயல்திறன் மறுஆய்வு செய்யப்பட்டது.


Next Story