கோவில் உண்டியல்களில் குறைந்த அளவே பணம் இருந்ததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற கொள்ளையன் - கண்காணிப்பு கேமரா காட்சியால் சிக்கினார்


கோவில் உண்டியல்களில் குறைந்த அளவே பணம் இருந்ததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற கொள்ளையன் - கண்காணிப்பு கேமரா காட்சியால் சிக்கினார்
x
தினத்தந்தி 19 Nov 2020 5:14 AM GMT (Updated: 19 Nov 2020 5:14 AM GMT)

கோவில் உண்டியல்களில் குறைந்த அளவே பணம் இருந்ததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த பெருங்குடி ஏலீம் நகரில் கடந்த 10-ந் தேதி நாகாத்தம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டது. மேலும் 12-ந் தேதி பெருங்குடி வேம்புலி அம்மன் கோவிலிலும், 15-ந் தேதி பெருங்குடி கங்கைஅம்மன் கோவிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போனது. கோவில்களில் நடைபெற்ற இந்த தொடர் திருட்டு குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் கடந்த 16-ந் தேதி கந்தன்சாவடியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியும் நடைபெற்றது. இதுகுறித்து வங்கி மேலாளர் புகார் செய்தார். அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவின் பேரில் துரைப்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது ஏற்கனவே திருட்டு வழக்கில் தொடர்புடைய துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 20) என்பவர்தான் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, குடிபோதைக்கு அடிமையான அவர், கோவில் உண்டியல்களை உடைத்து திருடியதும், ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் கார்த்திக் அளித்த வாக்குமூலத்தில், “எனது பணத்தேவைக்காக கோவில் உண்டியல்களை உடைத்து திருடினேன். ஆனால் அதில் குறைவாகவே பணம் இருந்தது. எனவே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தால் எனது தேவைக்கு ஏற்ப அதிகளவில் பணம் கிடைக்கும் என நினைத்தேன். இதற்காக சிறிய கடப்பாரையை கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றேன். ஆனால் முடியாததால் அங்கிருந்து தப்பிச்சென்றேன்” என்றார்.

கைதான கொள்ளையன் கார்த்திக்கிடம் இருந்து உண்டியலில் இருந்து திருடிய பணத்தில் ரூ.2 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story