திருநங்கைகளுக்கு சுய தொழில் செய்ய போலீசார் உதவி 40 பேருக்கு உபகரண பொருட்களை இணை கமிஷனர் வழங்கினார்
சென்னையில் திருநங்கைகள் 40 பேருக்கு சுய தொழில் செய்வதற்கு தேவையான தள்ளுவண்டி போன்ற உபகரண பொருட்களை இணை போலீஸ் கமிஷனர் சுதாகர் வழங்கினார்.
சென்னை,
சென்னையில் திருநங்கைகள் சுய தொழில் தொடங்குவதற்கு போலீசார் அவ்வப்போது உதவி செய்து வருகிறார்கள். சுய தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்த 40 திருநங்கைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு தேவையான தொழில் உபகரண பொருட்கள் வழங்கும் விழா நேற்று பகல் சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
கம்ப்யூட்டர்கள், லேப்-டாப்கள், தையல் எந்திரங்கள், தள்ளுவண்டிகள், இட்லி குக்கர்கள், மிக்சி, கிரைண்டர் போன்ற 21 வகையான உபகரண பொருட்கள் இந்த விழாவில் வழங்கப்பட்டது. சிறிய வேன் ஒன்றுகூட திருநங்கைகள் அமைப்புக்கு வழங்கப்பட்டது.
கிழக்கு மண்டல இணை போலீஸ் கமிஷனர் சுதாகர் இந்த விழாவில் கலந்துகொண்டு உபகரண பொருட்களை திருநங்கைகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக திருநங்கைகளுக்கு ஓசை இல்லாமல் சிறிய அளவில் இதுபோன்ற உதவிகளை செய்து வருகிறோம். கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கும் உதவிகள் செய்தோம். தள்ளுவண்டி கடை, சாப்பாட்டுகடை, பங்க் கடை வைப்பதற்கு தேவையான உபகரண பொருட்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளது.
பார்வை இழந்த திருநங்கை ஒருவருக்கு பெட்டிக்கடை வைக்க உதவி செய்யப்பட்டுள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த 4 திருநங்கைகளுக்கு லேப்-டாப்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக பேக்கரி கடைகள் வைத்து கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்து வருகிறோம். இதுபோன்ற உதவி திருநங்கைகள் வாழ்வில் பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் துணை கமிஷனர் சாமிநாதன், உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் ஷேட்டு, பிரதீப்தீபா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சூளைமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு செய்திருந்தார். விழாவில் கலந்துகொண்ட திருநங்கை அமைப்பை சேர்ந்த சுபா, ஜெயா உள்ளிட்ட நிர்வாகிகள் போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story