அத்திப்பட்டு ஊராட்சியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு


அத்திப்பட்டு ஊராட்சியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு
x

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மீஞ்சூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 4 தினங்களாக விட்டு, விட்டு பெய்து வருகின்றது. இந்த நிலையில், பொன்னேரி தாலுகாவுக்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து பொதுமக்களுக்கு பாதிப்பை தடுக்கும் வண்ணம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம், தாசில்தார் மணிகண்டன், ஒன்றிய ஆணையாளர் வேதநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல், துணைத்தலைவர் கதிர்வேல், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அங்கு மழைநீர் தேங்கிய இடங்கள் குறித்து கேட்டறிந்த கலெக்டர், பின்னர் அத்திப்பட்டு ஊராட்சி பகுதியில் மழைநீர் வரத்து கால்வாய் பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது தாங்கல் ஏரியை ஆழப்படுத்திய பின்னர், சுற்றுச்சுவர் கட்டி வல்லூர் தேசிய அனல்மின் நிலைய பகுதி மற்றும் அத்திப்பட்டு புதுநகர் ரெயில்வே பாதையின் வழியாக கொண்டு செல்ல வேண்டும் எனவும், அத்திப்பட்டு புதுநகரில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல் கோரிக்கைவைத்தார்.

அதைத் தொடர்ந்து அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சுற்றி வெள்ள தடுப்பு சுவர் அமைக்கவும், தாங்கல் ஏரியை ஆழப்படுத்தி கான்கிரீட் சுவர் அமைக் கவும், வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்திற்கு செல்லும் சாலையில் இரண்டு கல்வெட்டுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அத்திப்பட்டு பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், பொதுமக்களுக்கு பேரிடர் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Next Story