முசிறியில் குளிக்க சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவர்களை 2-வதுநாளாக தேடியும் கிடைக்கவில்லை - பாட்டி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
முசிறி காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கிய 2 சிறுவர்களை 2-வது நாளாக தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சிறுவர்களின் பாட்டி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
முசிறி,
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே திருவள்ளுவர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகன் சரவணகுமார் (வயது 31). அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகள் தெய்வபிரியாவிற்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்தநிலையில் தலை தீபாவளிக்காக தெய்வபிரியா தனது கணவர் சரவணகுமாரை அழைத்துக்கொண்டு ஈரோடு சென்றுள்ளார். பின்னர் முசிறியில் உள்ள தனது அத்தை ஜெயலட்சுமி வீட்டிற்கு கணவன், மனைவி இருவரும் வந்துள்ளனர். இதேபோன்று ஜெயலட்சுமியின் மகள் கரூர் ராமானுஜம்நகர் பகுதியில் வசிக்கும் ரேவதி தனது மகன்கள் நித்தீஷ் (12), மிதுனேஷ் (8) ஆகியோருடன் வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முசிறி பரிசல்துறை காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது பேராசிரியர் சரவணகுமார், உறவினர்களின் மகன்களான நித்தீஷ், மிதுனேஷ், முசிறியை சேர்ந்த நிதீஷ்குமார் ஆகியோர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினர். அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் சரவணகுமாரை மீட்டு முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி தகவலறிந்த முசிறி தீயணைப்பு நிலைய அதிகாரி முனியாண்டி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து ஆற்றுக்குள் இறங்கி 3 பேரையும் தேடினர். அப்போது சிறுவன் நிதீஷ்குமாரை உயிருடன் மீட்டனர். மேலும் அண்ணன், தம்பிகளான நித்தீஷ், மிதுனேஷ் ஆகிய இருவரையும் தேடியபோது ஆற்றுக்குள் ஏற்கனவே அங்கு மூழ்கி பலியான முசிறியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் பார்த்தீபன் (12) உடல் கிடைத்தது. நேற்று முன்தினம் மாலைநேரமாகி விட்டதாலும், மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருந்ததாலும் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் ஒரு குழுவினரும் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் காவிரி ஆற்றுக்குள் இறங்கி பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக தேடினர். நேற்று முன்தினத்தைவிட நேற்று ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது.
இதனால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆற்றில் பரிசல் மற்றும் படகு மூலம் சென்று தேடினர். ஆனால் மாயமான சிறுவர்கள் குறித்து எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் ஆற்றங்கரையில் காத்திருந்த சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
காவிரிஆற்றில் குளிக்கச்சென்றபோது நீரில் மூழ்கி பலியான உதவி பேராசிரியர் சரவணகுமார் மனைவி தெய்வபிரியா கோவை பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இதேபோன்று மாயமான சிறுவர்களின் தாய் ரேவதி கரூர் பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளி ஒன்றில் மகன்கள் படிக்கும் அதேபள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
மாயமான தனது பேரன்களை நினைத்து அழுது கொண்டிருந்த ஜெயலட்சுமி திடீரென காவிரி ஆற்றில் தண்ணீரில் விழுந்து செத்து போறேன் என்று கூறி தற்கொலை செய்து கொள்வதற்காக ஓடினார். அருகில் இருந்த உறவினர்கள் ஜெயலட்சுமியை காப்பாற்றி கரைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நேற்றும் மாலையும் இருள் சூழ்ந்துவிட்டதால் சிறுவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story