அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு: முதல் நாள் கலந்தாய்வில் 11 மாணவ-மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் - புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு காரணமாக முதல்கட்ட கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 11 மாணவ-மாணவிகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்தது.
புதுக்கோட்டை,
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அதிக வாய்ப்பு கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த கல்வி ஆண்டில் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று தொடங்கியது. முதலில் அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேர உள்ள மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு தொடங்கி உள்ளது.
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் மொத்தம் 59 பேர் பங்கேற்க உள்ளனர். தரவரிசை அடிப்படையில் நேற்று முதல் நாள் நடந்த கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் அரசு மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்தனர்.
அதன்விவரம் வருமாறு:-
கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் ஏ.திவ்யா, எம்.பிரசன்னா ஆகியோர் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியையும், புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி எச்.சுகன்யா, கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி எம்.தரணிகா ஆகியோர் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியினையும், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்த மாணவி சி.ஜீவிகா சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்தனர்.
வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எல்.அகத்தீஸ்வரன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியையும், சிதம்பரவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் டி.கவிவர்மன் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர். அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.புவனேஸ்வரி, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்துள்ளார்.
இதேபோல கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.ஹரிகரன், தாந்தாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.கிருஷ்ணவேணி, மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கே.பிரபாகரன் ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர்.
தரவரிசை அடிப்படையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிற கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவர்களும், 20 மாணவிகளும் என மொத்தம் 25 பேர் கலந்து கொள்ள உள்ளனர். தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள கலந்தாய்வில் 4 மாணவர்களும், 17 மாணவிகளும் என 21 பேர் பங்கேற்க உள்ளனர்.
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளை தேர்வு செய்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு கலெக்டர் உமாமகேஸ்வரி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவப்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்ததற்காக மாணவர்களும், அவர்களது பெற்றோரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story