கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்: “மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்” - அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி உறுதி


கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்: “மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்” - அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி உறுதி
x
தினத்தந்தி 19 Nov 2020 7:30 PM IST (Updated: 19 Nov 2020 7:14 PM IST)
t-max-icont-min-icon

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளையும் அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று காலை திருத்தங்கல் கனி மகாலில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

கடந்த தேர்தலின் போது இந்த தொகுதியில் நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றி உள்ளேன். இந்த தொகுதிக்கு என்ன தேவை என்பது குறித்து அறிந்து, அதை அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறேன். சிவகாசி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். எதிர்க்கட்சி வேட்பாளர் டெபாசிட் வாங்க கூடாது. அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

தேர்தல் பணியை இப்போதே ஆரம்பித்து விடுங்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனையை கூறி வாக்கு கேளுங்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதல் படி நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

பூத்கமிட்டி நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் ஒன்றிணைந்து தேர்தல் பணி ஆற்றிட வேண்டும். மாவட்ட மக்களின் தேவைகள் அனைத்தும் இந்த அரசு பாகுபாடு இல்லாமல் செய்து இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளையும் அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றும்.

வாக்காளர் சேர்க்கை முகாம் நடக்கும் போது புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஈடுபட வேண்டும். ஒவ்வெரு தேர்தலிலும் ஸ்டாலின் நாடகம் போடுகிறார். இந்த தேர்தலில் அவரின் நாடகம் எடுபடாது. இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தி.மு.க. எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

அதனால் மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள். அ.தி.மு.க.வுக்கு அனைத்து மத மக்களும், அனைத்து சமுதாய மக்களும் தானாக முன்வந்து வாக்களிப்பார்கள். ஸ்டாலின் என்ற பெயரே தமிழ் பெயர் கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், வி.எஸ்.பலராமன், புதுப்பட்டி கருப்பாமி, நகர செயலாளர்கள் அசன்பதுருதீன், பொன்சக்தி வேல், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சுபாஷினி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், இளைஞர்- இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுடர்வள்ளிசசிக்குமார், கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, ஊராட்சி மன்ற தலைவர்கள் லயன் லட்சுமிநாராயணன், நாகராஜ், தொழிலதிபர் லெனின் கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், கார்த்தி, சங்கர்ஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று சாத்தூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கி வாக்குச்சாவடி முகவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கி பேசினார். கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ராஜவர்மன் எம்.எல்.ஏ., மாநில அம்மா பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் எம்.எஸ்.கே. இளங்கோவன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முக்கனி, சாத்தூர் நகர செயலாளர் வாசன். முன்னாள் சேர்மன் ஸ்ரீ டெய்சிராணி, 20-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் இந்திரா கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் அம்மா மணிவண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் எஸ்.டி. முனிஸ்வரன், சாத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் குருசாமி, நகர, ஒன்றிய, கிளை செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சாத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர், மாவட்ட மாணவரணி செயலாளர் விஜய நல்லதம்பி செய்திருந்தார்.

Next Story