பரமக்குடி பகுதியில் கனமழையால் வீடு இடிந்தது
பரமக்குடி பகுதியில் கனமழையால் வீடு இடிந்தது.
பரமக்குடி,
பரமக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையால் பரமக்குடியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது.தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த மழைக்கு பரமக்குடி அருகே உள்ள பாம்புவிழுந்தான் கிராமத்தில் காலனியில் வசித்து வரும் ராக்கு முத்து, துரோபதை தம்பதி வீட்டைச் சுற்றிலும் மழைநீர் சூழ்ந்தது. மழையால் அவர்களின் வீடும் சேதம் அடைந்தது. இதனால் அவர்கள் வீட்டிற்குள்தூங்காமல் அருகில் இருந்த ஆடு வளர்க்கும் கொட்டகையில் தங்கியுள்ளனர்.
இந்தநிலையில் திடீரென அவர்களது வீடு இடிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளில் 5 ஆடுகளும், 10 நாட்டு கோழிகளும் சிக்கி உயிரிழந்தன. கணவன், மனைவி இருவரும் ஆட்டுக் கொட்டகையில் தங்கியதால் உயிர்தப்பினர். இதேபோல் பரமக்குடி எமனேசுவரத்தில் இருந்து வளையனேந்தல் செல்லும் சாலையில் இருந்த மின்கம்பம் சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதுகுறித்து அந்தபகுதி மக்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அப்புறப்படுத்தினர்.
பொன்னையாபுரம், காட்டு பரமக்குடி காலனி, எமனேசுவரம் ஜீவா நகர் உள்பட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் சூழ்ந்ததால் அந்தபகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் உள்ள பொன்னையாபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதன் வழியாக செல்ல முடியாமல் மாற்றுப் பாதையில் சென்று வருகின்றனர்.
Related Tags :
Next Story