கொட்டாம்பட்டி அருகே, மழையால் கார் கவிழ்ந்து வாலிபர் பலி - 5 பேர் படுகாயம்
கொட்டாம்பட்டி மழையின்போது நிலைதடுமாறிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாலிபர் ஒருவர் பலியான நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொட்டாம்பட்டி,
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்தவர் கண்ணன் மகன் அருணாசலம் (வயது 23). இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டபிரபு (19), நித்தீஷ்குமார் (19), செல்வ விக்னேஷ் (20), தருண் (21), முத்தையா முரளிதரன் (22) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு காரில் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சிக்கு சென்றார். பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சிங்கம்புணரிக்கு வந்து கொண்டிருந்தனர். காரை அருணாசலம் ஓட்டினார்.
கொட்டாம்பட்டியை அடுத்துள்ள குமுட்ராம்பட்டி விலக்கு நான்கு வழி சாலையில் வரும்போது கன மழை பெய்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து 4 வழிச்சாலையை விட்டு விலகி அருகில் உள்ள 20 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 6 பேரும் இடிபாடுகளில் சிக்கினர்.
தகவல் அறிந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணியாளர்கள் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் மணிகண்டபிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 5 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story