சின்னசேலம் அருகே, ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
சின்னசேலம் அருகே ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னசேலம்,
சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டியம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு 250-ல் இருந்து 300 தொழிலாளர்கள் வரை ஏரி, குளம் பராமரிப்பு, சாலையோரம் சீரமைப்பு பணி, மண் வெட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஊராட்சி நிர்வாகம் வேலையை தற்காலிகமாக நிறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 3 நாட்களுக்கு மேலாக வேலை கொடுக்கப்படாததால் தொழிலாளர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் ஒன்று திரண்டு சின்னசேலம்-கச்சராபாளையம் சாலையில் உள்ள தொட்டியத்தில் இருந்து தென்செட்டியந்தல் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சின்ன சேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் சின்ன சேலம் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்பிரகாசம், ஊராட்சி செயலர் துரை ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வேலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை இல்லாத பட்சத்தில் நாளை(அதாவது இன்று) முதல் வேலை வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களின் மறியல் போராட்டம் காரணமாக தென்செட்டியந்தல் சாலையில் 30 நிமிடத்துக்கும் மேலாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story