பெரியதாழையில் ரூ.30 கோடியில் தூண்டில் வளைவு பாலம் நீட்டிப்பு பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
பெரியதாழையில் ரூ.30 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு பாலம் நீட்டிப்பணிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
சாத்தான்குளம்,
சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் ஏற்பட்டு வரும் கடல்சீற்றத்தை தடுக்கும் வகையில் கடந்த 4ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.25கோடியில் கிழக்கே 800 மீட்டர் அளவிலும், மேற்கே 200 மீட்டர் அளவிலும் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டன. இந்த பால அமைத்த பின்னரும், கடல் சீற்றம் அதிகரித்து கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் படகுகள் நிறுத்த முடியவில்லை என மீனவர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவில் கிழக்கே 360 மீட்டரும், மேற்கே 240 மீட்டர் அளவில் நீட்டித்து அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு கடந்த 11-ந்தேதி வந்தபோது இந்த பணியை தொடங்கி வைத்தார்.
தொடக்க விழா
இதையடுத்து பெரியதாழையில் ரூ.30 கோடியில் அமைக்கப்பட உள்ள தூண்டில் வளைவு நீட்டிப்பு பணி தொடக்க விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சண்முகநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். பெரியதாழை பங்குதந்தை சுசீலன் வரவேற்று பேசினார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ கடற்கரையில் இப்பணிக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி நடத்தி வருகிறார். சண்முகநாதன் எம்.எல்.ஏ. பெரியதாழைக்கு தூண்டில் வளைவு வேண்டும் என சட்டபேரவை கூட்ட தொடரில் முதல் கோரிக்கையாக வைத்தார். அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்டு, பெரியதாழையில் ரூ.30 கோடியில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இதேபோல் திருச்செந்தூர் ஆலந்தலையில் ரூ.40 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு விரைவில் தொடங்கப்பட உள்ளது. மீனவ மக்கள் நலனையே கருத்தில் கொண்டு அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது. இப்பகுதி மீனவர்களுக்கு இதுவரை 280 பேருக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. இதை அதிகரித்து 400 பேருக்கு வழங்கிட வேண்டும் என கேட்டுள்ளனர். அதன்படி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெரியதாழை மீனவர்கள் பலகோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றப்படும் என்றார்.
முன்னதாக விழாவில் பணியின் போது இறந்த உடன்குடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகர் மகளுக்கு வாரிசு அடிப்படையில் பணிநியமன ஆணையை அமைச்சர் வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சாத்தான்குளம் உதவி போலீஸ் சூப்பிரண்டு காட்வின் ஜெகதீஸ்குமார், திருச்செந்தூர் உதவிகலெக்டர் தனப்பிரியா, மீன்வளத்துறை இணை இயக்குநர் தீபா, உதவி இயக்குநர் வயோலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், பாண்டியராஜ், தாசில்தார் லட்சுமி கணேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தூர்ராஜன், பெரியதாழை ஊராட்சித் தலைவர் பிரதீபா, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் அச்சம்பாடுசவுந்திரபாண்டி, ராஜ்நாராயணன், லட்சுமணபெருமாள், மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி, துணைத் தலைவர் அப்பாத்துரை, மாவட்ட கவுன்சிலர் தேவவிண்ணரசி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அம்மா நகரும் ரேஷன் கடைகள்
கடம்பூர் அருகே உள்ள ஓட்டுடன்பட்டி கிராமத்தில் ரேஷன் கடை திறப்புவிழா நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ ரேஷன்கடையை திறந்து வைத்தார். பின்னர், சமீபத்தில் கொலை செய்யப்பட்ட விளாத்திகுளம் தாலுகா துவரந்தை கிராமத்தை சேர்ந்த சங்கரலிங்கம் பச்சைமாலின் மனைவி ஆவுடையம்மாளுக்கு வன்கொடுமை தீருதவி தொகை ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500-க்கான காசோலையை வழங்கினார். அதனை தொடர்ந்து கயத்தாறு யூனியனுக்கு உட்பட்ட கிராமங்களில் அம்மா நகரும் ரேஷன்கடைகள் திறப்பு விழா நடந்தது. திருமலாபுரம் பஞ்சாயத்தில் நொச்சிகுளம் கிராமத்திலும், கயத்தாறு பேரூராட்சி பகுதியில் புதுக்கோட்டை, அரசன்குளம் மற்றும் கோவில்பட்டி கோவில் சண்முக நகர், தாமஸ் நகர், கயத்தாறு யூனியன் சிவஞானபுரம் பஞ்சாயத்து வாகைத்தாவூர், ஆவுடையாபுரம் சொக்கேந்திரபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களிலும் அம்மா நகரும் ரேஷன் கடையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அவருடன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, கயத்தாறு நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் ஜோதிபாசு, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் நீலகண்டன், கயத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் முருகேசன் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, வட்ட வழங்கல் தாசில்தார் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அரசன்குளம் கிராமத்தில் 6 பேருக்கு அம்மா இரு சக்கர வாகனங்களை அமைச்சர் வழங்கினார்.
கோவில்பட்டி
கோவில்பட்டி நகராட்சி அண்ணா பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகமும், ரோட்டரி சங்கமும் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உலக கழிப்பறை தினம் மற்றும் கையெழுத்து இயக் கத்தை நடத்தியது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) கோவிந்தராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முதலில் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி ஊரணி தெருவில் உள்ள நகரசபை நகர்நல மையத்திற்கு ஜெராக்ஸ், ஸ்கேனர், பிரிண்டர் உபகரணத்தை ரோட்டரி சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமையில் மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, துணை ஆளுநர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் அமைச்சரிடம் வழங்கினார்கள். இதை நகர் நலமைய மருத்துவர் ராமமூர்த்தியிடம் அமைச்சர் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி தாமஸ் நகரில் ரூ.2.60 கோடியில் கட்டப்பட்டு முதல்-அமைச்சரால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி பணிகளை தொடங்கி வைத்தனர். வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சந்திரசேகர் வரவேற்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து இலுப்பையூரணி சண்முகநகரில் ரூ.1.23 கோடி செலவில் கட்டப்பட்டு முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றி அமைச்சர் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர்கனி, பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் சசிகுமார், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணைத் தலைவர் பழனிச்சாமி, நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் சவுந்தர்ராஜன், இணைச்செயலாளர் செண்பகமூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், இணைச்செயலாளர் விஜயராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் வேலுமணி, பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story