சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் குவிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழாவையொட்டி பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
திருச்செந்தூர்,
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிக்கால பூஜைக்கு பின்னர் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடைபெற்றது.
மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து மாலையில் சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், இரவில் சுவாமி-அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் யாகசாலையில் எழுந்தருளினார்.
இன்று, சூரசம்ஹாரம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை 4.30 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து கடற்கரை நுழைவாயில் பகுதியில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்கிறார்.
இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொள்கிறார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் சுவாமி வைத்து கொள்கிறார்.
2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
7-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) இரவில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. எனவே ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் மத்தியில் நடைபெறும் சூரசம்ஹாரம் தற்போது பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யு-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் பாதுகாப்புக்காக சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story