மின்சார துறைக்கு நிதி உதவி கிடைக்கவில்லை துணை முதல்-மந்திரி அஜித்பவார் மீது காங்கிரஸ் மந்திரி குற்றச்சாட்டு


மின்சார துறைக்கு நிதி உதவி கிடைக்கவில்லை துணை முதல்-மந்திரி அஜித்பவார் மீது காங்கிரஸ் மந்திரி குற்றச்சாட்டு
x

மின்சார துறைக்கு உதவ துணை முதல்-மந்திரி அஜித்பவாரின் நிதித்துறைக்கு 8 முறை கடிதம் எழுதியும் எதுவும் நடக்கவில்லை என்று காங்கிரசை சேர்ந்த மந்திரி நிதின் ராவத் குற்றம்சாட்டி உள்ளார்.

மும்பை, 

மராட்டியத்தின் ஊரடங்கு காலத்தில் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பா.ஜனதா, நவநிர்மாண்சேனா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இந்தநிலையில் காங்கிரசை சேர்ந்த மின்துறை மந்திரி நிதின் ராவத் கூறியிருப்பதாவது:-

மாநிலத்தில் பலர் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் உள்ளனர். இதற்காக மத்திய அரசிடம் உதவி கேட்ட போது அவர்கள் 10.11 சதவீத வட்டிக்கு ரூ.80 ஆயிரம் கோடி தருவதாக கூறுகின்றனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கினால் கூட 6 முதல் 7 சதவீதம் தான் வட்டி விதிப்பார்கள். எனவே மத்திய அரசு ஒரு கந்துவட்டிக்காரர் போல செயல்படுகிறது. மற்ற மாநிலங்களுக்கு உதவி செய்வது போல மராட்டியத்திற்கும் ரூ.10 ஆயிரம் கோடி வழங்குமாறு தனிப்பட்ட முறையில் மத்திய அரசிடம் கேட்டேன். ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

நிதித்துறை மீது குற்றச்சாட்டு

மாநில மின்நிறுவனங்கள் ஏற்கனவே இழப்பை சந்தித்து வருகின்றன. எனவே மின்துறைக்கு உதவுமாறு 8 முறை மாநில நிதி துறைக்கு கடிதம் எழுதினோம். எதுவும் நடக்கவில்லை. மாநில அரசு அனைத்து துறைக்கும் சமமாக நிதியை ஒதுக்க வேண்டும்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மின்நிறுவனங்கள் ரூ.20 ஆயிரத்து 735 கோடி பாக்கி வைத்து உள்ளது. அது தற்போது ரூ.67 ஆயிரத்து 864 கோடியாக உயர்ந்து உள்ளது. எனவே இந்த குழப்பம் முந்தைய பா.ஜனதா அரசால் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு

நிதித்துறையை தேசியவாத காங்கிரசை சேர்ந்த துணை முதல்-மந்திரி அஜித்பவார் கவனித்து வருகிறார். அந்த துறையை காங்கிரசை சேர்ந்த மந்திரி ஒருவர் விமர்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே அதிக மின்கட்டண விவகாரத்தில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என பா.ஜனதா எம்.பி. ரக்சா கட்சே எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Next Story