மருத்துவ படிப்புக்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் விஷ்ணு பாராட்டு


மருத்துவ படிப்புக்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் விஷ்ணு பாராட்டு
x
தினத்தந்தி 20 Nov 2020 12:30 AM GMT (Updated: 20 Nov 2020 12:30 AM GMT)

மருத்துவ படிப்புக்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கு நெல்லை கலெக்டர் விஷ்ணு பாராட்டு தெரிவித்தார். அவர்களுக்கு கல்வி உபகரணங்களை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வழங்கினார்.

நெல்லை, 

அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளிகளில் படித்த 6 மாணவர்கள், அரசு மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி நெல்லை அருகே நல்லம்மாள்புரம் ஆதிதிராவிடர் நல அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பகவதி, மருதகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அகிலா, டவுன் கல்லனைஅரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கவுசல்யா, பிரியதர்ஷினி, சுத்தமல்லி அரசு பள்ளி மாணவர் சுடலை ராஜா, வெள்ளாளங்குழி அரசு பள்ளி மாணவர் அன்பரசன் ஆகிய 6 மாணவர்கள் சென்னையில் நடந்த மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்குபெற்று மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணையினை பெற்று கொண்டு நேற்று ஊர் திரும்பினர்.

அவர்களை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தனது அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு தேவையான முதலாம் ஆண்டுக்கான புத்தகங்கள், மருத்துவ அகராதிகள், கல்லூரி சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேசராஜா, கலெக்டர் முன்னிலையில் வழங்கினார். இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும்.

மக்களுக்கு சேவை செய்ய...

அப்போது கலெக்டர் விஷ்ணு கூறும்போது, இந்த வாய்ப்பை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் சிறந்த டாக்டர்களாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றார்.

தச்சை கணேசராஜா கூறும்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கியதன் மூலம் இந்தியாவிலேயே எந்த மாநில முதல்-அமைச்சர்களும் செய்யாத சாதனைகளை அ.தி.மு.க. அரசு செய்துள்ளது என்றார்.

ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story