ஊர்க்காவல் படையில் 20 பணியிடங்களுக்கு 1,425 பேர் போட்டி உடற்தகுதி தேர்வு தொடங்கியது


ஊர்க்காவல் படையில் 20 பணியிடங்களுக்கு 1,425 பேர் போட்டி உடற்தகுதி தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 20 Nov 2020 5:12 AM GMT (Updated: 20 Nov 2020 5:12 AM GMT)

ஊர்க்காவல் படையில் சேர கடும் போட்டி நிலவுகிறது. அதாவது 20 பணியிடங்களுக்கு 1,425 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.

கள்ளக்குறிச்சி, 

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 15 ஆண்களுக்கான பணியிடங்களும், 5 பெண்களுக்கான பணியிடங்களும் காலியாக இருந்தன. இப்பணியிடத்திற்காக 1,425 பேர் விண்ணப்பித்தனர். ஊர்க்காவல் படையில் சேர கடும் போட்டி நிலவுகிறது. எனவே இவர்களில் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நேற்று தொடங்கியது. இத்தேர்வு விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் நாளான நேற்று விண்ணப்பித்தவர்களில் 250 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பங்கேற்க வந்தவர்களை ஆயுதப்படை போலீஸ் மைதான நுழைவுவாயிலில் நிறுத்தி அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களுக்கு முக கவசம் வழங்கியும், சானிடைசரை பயன்படுத்த வைத்தும் தேர்வு நடைபெறும் இடத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்களுக்கு முதலாவதாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. பின்னர் உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் ஆண்களுக்கு உயரம் 168 செ.மீட்டரும், மார்பளவு சாதாரண நிலையில் 82 செ.மீட்டரும், விரிவடையும்போது 85 செ.மீட்டரும் இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையிலும், அதேபோல் பெண்களில் பொதுப்பிரிவினருக்கு உயரம் 157 செ.மீட்டரும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 155 செ.மீட்டரும் இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையிலும் உடற்தகுதி தேர்வு நடந்தது.

இந்த தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அப்போது ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமசாமி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஊர்க்காவல் படை மண்டல தளபதி ரகுநாதன், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, இந்த தேர்வு வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. இதில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊர்க்காவல் படை சம்பந்தமான அடிப்படை பயிற்சி 15 நாட்கள் அளிக்கப்படும். அதன் பிறகு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்.

Next Story