மருத்துவம் படிக்க செல்லும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள்-கிராம மக்கள் பாராட்டு
மருத்துவம் படிக்க செல்லும் அரசு பள்ளி மாணவ-மாணவி களுக்கு ஆசிரியர்கள்-கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கீரமங்கலம்,
அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் மருத்துவம் படிக்க தமிழக அரசு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதற்கான மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் கட்ட கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 11 மாணவ-மாணவிகள் மருத்துவம் படிக்க தேர்வாகினர்.
அவர்களில் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகளும், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஒருவரும் என ஒரே கிராமத்தில் இருந்து 5 மாணவ, மாணவிகள் தேர்வாகினர். அவர்கள் நேற்று சொந்த கிராமத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு சென்றனர். அவர்களுக்கு கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து, பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் சின்னசாமி, ராமன், செந்தமிழ்செல்வி மற்றும் முன்னாள் பேரூராட்சி தலைவர் துரை, பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
மருத்துவப் படிப்பிற்காக தேர்வாகி உள்ள செரியலூர் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா, தரணிகா, ஹரிகரன் ஆகிய 3 பேரும் ஒன்றாம் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரை செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த பள்ளித் தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அன்பரசன் கூறுகையில், எங்கள் பள்ளி மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தி அனுப்புகிறோம். அந்தவகையில், மருத்துவப்படிப்பிற்காக தேர்வாகி உள்ள 3 பேருக்கும் கல்விக்கான உதவிகளை செய்வேன் என்றார்.
கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் ஊராட்சியில் கூகை புலையான் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அகஸ்தீஸ்வரன், பிரபாகரன் ஆகிய 2 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்து உள்ளது. அவர்களில் மாணவர் அகதீஸ்வரன் மருத்துவ கலந்தாய்வு முடிந்து நெல்லை மருத்துவக் கல்லூரியில் சேர சென்று விட்டார்.
மற்றொரு மாணவரான பிரபாகரன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விட்டு நேற்று சொந்த கிராமத்திற்கு வந்தார். அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து மாணவன் பிரபாகரன் கூறுகையில், எனது தந்தை குமாரவேல் டிராக்டர் டிரைவராக உள்ளார். தாய் கலைமதி. நான் மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பு தேர்வில் 476 மதிப்பெண்களும், பிளஸ்-2 தேர்வில் 533 மதிப்பெண்களும் பெற்றேன். நீட் தேர்வில் 230 மதிப்பெண்கள் கிடைத்தது. நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று சொந்த மாவட்டத்திலேயே இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் கிராம மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மருத்துவராகி சிறந்த சேவை புரிவேன் என்றார். மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அப்பகுதியினர் விளம்பர பதாகை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story