இலங்கை தலைமன்னார் கடற்கரையில் புதிதாக அமைத்த 20 காற்றாலைகள் - தனுஷ்கோடியில் இருந்து தெளிவாக தெரிகிறது
இலங்கை தலைமன்னார் கடற்கரையில் புதிதாக 20 காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த காற்றாலைகள், தனுஷ்கோடி கடற்கரையில் இருந்து பார்த்தாலும் தெரிகின்றன.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதி அமைந்துள்ளது. அது போல் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே கடலுக்குள் 13 மணல் திட்டுகள் உள்ளன. இதில் 5-வது மணல் திட்டுடன் இந்தியாவின் எல்லை முடிவடைகிறது.
அதன் பின்னர் இலங்கை கடல் எல்லை ஆரம்பமாகிறது. இந்த மணல் திட்டுகளில் இரவு நேரங்களில் கடல்நீர் சூழ்ந்தும், பகல் நேரத்தில் இயல்பு நிலையுடன் மணல் திட்டானது தெளிவாக வெளியே தெரியும். தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த நிலையில் இலங்கை தலைமன்னார் கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மின்சார உற்பத்திக்காக சுமார் 20 காற்றாலைகள் கடலுக்குள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த காற்றாலைகளானது தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டுகளில் இருந்து பார்த்தாலும், ஒரு சில நேரங்களில் நன்றாக வெயில் இருக்கும் பட்சத்தில் அரிச்சல்முனை கடற்கரை சாலையில் இருந்து பார்த்தாலும் தெளிவாக தெரிகின்றது. நேற்றும் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் வானம் தெளிவாக இருந்ததால், இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகள் தெளிவாக தெரிந்தன.
இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு இருப்பது போல், தனுஷ்கோடி கடல் பகுதியிலும் காற்றாலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக ஒரு ஆண்டுக்கு முன்பு மின்சக்தி துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது. எனவே தனுஷ்கோடி கடல் பகுதியிலும் காற்றாலைகள் அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்திருக்கிறது.
Related Tags :
Next Story