திருப்பூர் 4-வது குடிநீர் திட்ட பணிகளுக்கு எதிர்ப்பு: மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்பு குழுவினர் பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டம் - 22 பேர் கைது


திருப்பூர் 4-வது குடிநீர் திட்ட பணிகளுக்கு எதிர்ப்பு: மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்பு குழுவினர் பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டம் - 22 பேர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2020 4:00 PM GMT (Updated: 20 Nov 2020 4:00 PM GMT)

திருப்பூர் 4-வது குடிநீர் திட்ட பணிகளுக்கு மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்பு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் மற்றும் திருப்பூர் 4-வது குடிநீர் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்பு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த திட்டங்களை பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் தண்ணீரை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்றும், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு விளாமரத்தூர் பகுதியில் இருந்து தூய்மையான குடிநீர் வழங்கவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருப்பூர் குடிநீர் திட்டத்திற்காக மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குழாய்கள் பதிக்க குழி தோண்டும் போது அதனை தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று முன்னரே அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட நடூரில் திருப்பூர் 4-வது குடிநீர் திட்டத்திற்காக பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நேற்று தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதியம் 2 மணிக்கு மேட்டுபாளையம் குடிநீர் பாதுகாப்பு குழுவினர் நடூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் சென்ன கேசவன் மற்றும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

திடீரென குடிநீர் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர்கள் சபீக் அகமது, பாஷா, எம்.சு.மணி ஆகியோர் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. அருண்குமார் முன்னிலையில் குடிநீர் பாதுகாப்பு குழுவை சேர்ந்த 20 பெண்கள் உள்பட சுமார் 60 பேர் பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்து குழி தோண்டும் பணியை தடுத்து நிறுத்தினார்கள். தொடர்ந்து இந்த திட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஹக்கீம், நவுபல், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த காதர்பாட்சா, காதர் மைதீன், மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜாபர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சந்திரசேகர், ஐக்கிய ஜமாத் முகமது ஷரீப், எஸ்.டி.டி.யு. முகமது அலி, ஒயிட் பாபு, வக்கில் ரகமத்துல்லா உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதன் காரணமாக அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story