நெல்லை, தென்காசி மாவட்டத்தில் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்


நெல்லை, தென்காசி மாவட்டத்தில் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்
x
தினத்தந்தி 20 Nov 2020 11:46 PM GMT (Updated: 20 Nov 2020 11:46 PM GMT)

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் முருகன் கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது.

நெல்லை, 

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 15-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சுவாமி வீதி உலாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாலை நேரத்தில் சுவாமி கோவில் வளாகத்தில் வீதி உலா சென்றார். சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலையில் நடைபெற்றது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் உற்சவர், மேலகோவில் என்று அழைக்கப்படுகின்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு எழுந்தருளினார். அங்கு வைத்து சுவாமிக்கு நேற்று காலையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், ஹோம பூஜையும் நடந்தது. மதியம் 1 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

மாலை 4.31 மணிக்கு சுவாமி சப்பரத்தில் எழுந்தருளினார். கோவில் முன்பு கஜமுகா சூரன், சிங்கமுகா சூரன், சூரபதுமன் ஆகியோரை சுவாமி சம்ஹாரம் செய்தார். இதைத்தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சியும், இரவு 7 மணிக்கு மேலக்கோவிலில் வைத்து சுவாமி-அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

சாலைக்குமார சுவாமி

நெல்லை சந்திப்பில் உள்ள பாளையஞ்சாலை குமாரசுவாமி கோவிலில் நேற்று காலையில் விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், வேதபாராணயம், கும்ப பூஜை மற்றும் 108 சங்கு பூஜை உள்பட பல்வேறு விசேஷ பூஜைகள், மதியம் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, மாலையில் சண்முகா அர்ச்சனை நடந்தது.

இதைத்தொடர்ந்து மாலை 4.35 மணிக்கு சாலைக்குமார சுவாமி, பட்டு வண்ண குடைபிடித்து கோவிலில் இருந்து சூரனை வதம் செய்யப்புறப்பட்டு வந்தார். கோவில் முன்பு சூரன்களை வதம் செய்தார். பின்னர் மாமரமாக உருமாறி நின்ற சூரனை முருகபெருமான் வதம் செய்து, அவனை சேவலும், மயிலுமாக ஆட்கொண்டார்.

முருகன் கோவில்கள்

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் உள்ள ஆறுமுகநயினார் சன்னதியில் இருந்து சுவாமி புறப்பட்டு சுப்பிரமணியர் வெளியே வந்தும், சண்முகர், சுவாமி சன்னதி வழியாக வெளியே வந்ததும் இருவரும் கோவில் வளாகத்தில் வைத்து சூரசம்ஹாரம் செய்தனர். பாளையங்கோட்டையில் உள்ள குட்டத்துறை பாலமுருகன் கோவில், மேலவாசல் சுப்பிரமணியசுவாமி கோவில், மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் கோவில், பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவிலில் உள்ள சண்முகர் உள்ளிட்ட முருகன் கோவில்களிலும் நேற்று கந்தசஷ்டி விழா நடந்தது.

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். கோவில் குடவாசல் மண்டபத்தில் சூரனை, முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். அதன் பின்னர் முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இதேபோல் பாபநாசம் கோவில் முன்பும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி- பாவூர்சத்திரம்

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது. 4.45 மணிக்கு பாலமுருகன் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலில் சூரன் சிங்க முகத்துடனும், பின்னர் யானை முகத்துடனும், அதை தொடர்ந்து ஆடு முகத்துடனும் வந்த சூரனை சுவாமி வதம் செய்தார். பின்னர் மா இலையுடன் வந்த சூரனை பாதியாக வதம் செய்தார். இதைத்தொடர்ந்து சூரபத்மனை முருகன் வதம் செய்யும் காட்சி நடைபெற்றது. பின்னர் தீபாராதனையும், அதை தொடர்ந்து பாலமுருகனுக்கு நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதேபோல் ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரமும் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.

சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சிகோவில் அடிவாரத்தில் நடந்தது.மாலை 5 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி மலைக்கோவிலில் நடந்தது. முத்துக்குமாரசாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, சிங்கமுகன், தாரகாசூரனை வதம் செய்தார். 

Next Story