மழைக்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு தமிழகத்தில் 4 ஆயிரம் முகாம்கள் தயார்


மழைக்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு தமிழகத்தில் 4 ஆயிரம் முகாம்கள் தயார்
x
தினத்தந்தி 21 Nov 2020 12:00 AM GMT (Updated: 21 Nov 2020 12:00 AM GMT)

மழைக்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று வருவாய்த்துறை நிர்வாக ஆணையாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.

நெல்லை, 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

வருவாய் நிர்வாக ஆணையாளரும், கூடுதல் தலைமை செயலாளருமான பணீந்திர ரெட்டி தலைமை தாங்கி பேசினார். அப்போது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், வெள்ள சேதங்கள் ஏற்பட்டால் எப்படி பணியாற்ற வேண்டும்? என்பது குறித்தும் விளக்கி கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள் விஷ்ணு (நெல்லை), சமீரன் (தென்காசி), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர்கள் பெருமாள், கல்பனா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், உதவி கலெக்டர்கள் சிவ கிருஷ்ணமூர்த்தி, பிரதீக் தயாள், முத்துசெல்வி, நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன், தீயணைப்பு துறை அதிகாரி மகாலிங்கம் மூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உள்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

2 லட்சம் பேர்

இதைத்தொடர்ந்து வருவாய் நிர்வாக ஆணையாளர் பணீந்திர ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழைக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான பேர் தங்கக்கூடிய அளவில் 4 ஆயிரம் தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

பேரிடர் மேலாண்மை மூலம் பயிற்சி பெற்ற 1000 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அவர்களிடம் பயிற்சி பெற்ற 4 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மாநிலம் முழுவதும் தயார் நிலையில் உள்ளனர். தற்போதுள்ள மழையில் பெரிய அளவில் எந்த சேதமும் ஏற்படவில்லை. மழைக்காலத்தில் கடலோர பகுதியில் உள்ள மீனவர்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்லுவது சம்பந்தமாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. முன்பு 50 நாட்டின்கல் மைல் தொலைவில் தான் தகவல் அளிக்க முடியும். தற்போது 500 நாட்டின்கல் மைல் தொலைவு வரை தகவல் தெரிவிக்கலாம். அந்த அளவிற்கு தேவையான தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. குற்றாலம் அருவியில் ஏற்பட்டுள்ள சேதங்கள் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் சரிசெய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story