கரும்பு விவசாயிகளுக்கு ரூ.24 கோடி நிலுவைத்தொகை பிரச்சினை: சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிக்கை
கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய ரூ.24 கோடி நிலுவைத்தொகைக்காக சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிக்கை அனுப்பி இருப்பதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காணொலி மூலமாக நடைபெற்றது. தென்காசி, கடையநல்லூர், கீழப்பாவூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய 5 இடங்களில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகங்களில் இந்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் சமீரன் காணொலி மூலமாக விவசாயிகளிடம் குறைகளை கேட்டு பேசினார்.
குறைபாடுகள்
கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஜாகீர் உசேன் உள்பட பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் கொடுத்த கரும்புக்கான தொகை சுமார் ரூ.24 கோடி இதுவரை வழங்கவில்லை. அதனை வழங்க வேண்டும் என்று கோரி மனு கொடுக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று கோரி மனு கொடுக்கப்பட்டது.
மேலும் வடகரை, கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் யானை போன்ற வன விலங்குகளால் பயிர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 2017-2018, 2018 -2019 ஆகிய காலங்களில் இழப்பு ஏற்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை என்றும், அதனை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரி மனுக்கள் கொடுக்கப்பட்டன.
கலெக்டர் பேச்சு
கூட்டத்தில் கலெக்டர் சமீரன் பேசியதாவது:-
சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை குறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதில் அக்டோபர் மாதம் 30-ந்தேதி வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை நிர்வாகம் அந்த நிலுவைத்தொகையை வழங்கவில்லை. எனவே வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து உத்தரவு வந்தவுடன் அந்த ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கால்வாயை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வனவிலங்குகள் பயிர்களை அழிப்பதை தடுக்கவும், காப்பீடு தொகை கிடைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்ல முத்துராஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை (பொறுப்பு) சேதுராமன், துணை இயக்குனர் கிருஷ்ணகுமார், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயபாரதி மாலதி மற்றும் வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story