மு.க.ஸ்டாலினுக்கு எதிரான போஸ்டரை கண்டித்து தி.மு.க. பெண் உறுப்பினர் தீக்குளிக்க முயற்சி


மு.க.ஸ்டாலினுக்கு எதிரான போஸ்டரை கண்டித்து தி.மு.க. பெண் உறுப்பினர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 21 Nov 2020 3:10 AM GMT (Updated: 21 Nov 2020 3:10 AM GMT)

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டதை கண்டித்து தி.மு.க. பெண் உறுப்பினர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை,

கோவை பூ மார்க்கெட் தெப்பக்குளம் மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி சித்ரகலா (வயது 49). தி.மு.க. உறுப்பினர். கோவையில் கடந்த சில நாட்களாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கேலி செய்து ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. இது தி.மு.க.வினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கோவையில் மீண்டும் மு.க.ஸ்டாலினை கேலி செய்து போஸ்டர் ஒட்டியதை கண்டித்தும், போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே சித்ரகலா கையில் கட்சி கொடியுடன் கோஷமிட்டபடி வந்தார். பின்னர் அவர் அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவர், திடீரென்று தான் கேனில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

உடனே அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் விரைந்து வந்து, சித்ரகலாவை தடுத்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்து தீக்குளிக்க முயன்ற சித்ரகலாவை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக சித்ரகலா மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Next Story