நீடாமங்கலம் அருகே பெண் கொலை வழக்கில் கணவர் கைது: நடத்தையில் சந்தேகப்பட்டு - காரில் வைத்து அடித்துக்கொன்றது அம்பலம்


நீடாமங்கலம் அருகே பெண் கொலை வழக்கில் கணவர் கைது: நடத்தையில் சந்தேகப்பட்டு - காரில் வைத்து அடித்துக்கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 21 Nov 2020 9:44 AM IST (Updated: 21 Nov 2020 9:44 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே பெண் கொலை வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு காரில் வைத்து அவரை அடித்துக்கொன்றது அம்பலமாகி உள்ளது.

நீடாமங்கலம், 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கற்கோவில் பகுதியில் வெண்ணாற்றில் கடந்த 16-ந் தேதி 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் பிணமாக கட்டப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் மன்னார்குடி- மதுக்கூர் சாலையில் உள்ள மணிகண்டன் நகர் பகுதியை சேர்ந்த அம்சகர்ணன்(வயது46) மனைவி சுதா(37) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சுதாவை கொலை செய்தது யார்? அவர் ஏன் கொலை செய்யப்பட்டார்? என விசாரணை நடத்தினர். விசாரணையின் போது போலீசாரின் சந்தேகப்பார்வை சுதாவின் கணவர் அம்சகர்ணன் மீது திரும்பியது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு.

மன்னார்குடியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த அம்சகர்ணனுக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவி சுதா. சுதாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அம்சகர்ணன் அவரிடம் பல முறை தகராறில் ஈடுபட்டார். சம்பவத்தன்று தகராறு முற்றியதால் சுதாவின் கை, கால்களை கயிற்றால் கட்டிய அம்சகர்ணன் அவரை ஒரு காரில் தூக்கி போட்டு தனது மாமனார் வீட்டுக்கு கொண்டு சென்றார். அவர்கள் காரில் சென்று கொண்டிருந்த போது தண்ணீர்குன்னம் பகுதியில் வைத்து சுதா, மீண்டும் அம்சகர்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அம்சகர்ணன் காரில் இருந்த இரும்புக்கம்பியை எடுத்து சுதாவின் தலையில் அடித்தார். இதில் படுகாயமடைந்த சுதா காரிலேயே இறந்தார். பின்னர் அவர் உடலை எங்கு வீசுவது என தெரியாமல் காரில் வைத்து பல இடங்களில் சுற்றிய அம்சகர்ணன் இறுதியில் சுதா உடலை சாக்குப்பையில் அடைத்து நீடாமங்கலம் அருகே கற்கோயில் பகுதியில் வெண்ணாற்றில் வீசியுள்ளார்.

இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் அம்சகர்ணனை கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் அடித்துக்கொன்று உடலை ஆற்றில் வீசிய சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story