மாவட்ட செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து: தி.மு.க.வினர் சாலை மறியல்- பஸ் கண்ணாடி உடைப்பு திரளானோர் கைது + "||" + Udayanidhi condemned Stalin arrest DMK party road blockade Bus glass breakage Crowds arrested

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து: தி.மு.க.வினர் சாலை மறியல்- பஸ் கண்ணாடி உடைப்பு திரளானோர் கைது

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து: தி.மு.க.வினர் சாலை மறியல்- பஸ் கண்ணாடி உடைப்பு திரளானோர் கைது
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர். மேலும் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.
திருச்சி, 

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் இருந்து உரிய அனுமதி பெறாமல் நடைபயணம் மேற்கொள்ள முயன்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனடியாக அவரை விடுதலை செய்ய கோரியும் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி தலைமையில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் போலீசார் அங்கு விரைந்து வந்து வைரமணி உள்பட 100 பேரை கைது செய்தனர். அவர்களை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது சிலர் அந்த வழியாக சென்ற ஒரு அரசு டவுன் பஸ்சின் கண்ணாடி மீது கைகளால் தட்டி கற்களை வீசினார்கள். இதில் ஒரு பஸ்சின் கண்ணாடி உடைந்தது. கண்ணாடியை உடைத்தது யார் என்பதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபோல் லால்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். தொட்டியம் வாணப்பட்டறை கார்னரில் தொட்டியம் பேரூர் கழகம், கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக ஒன்றிய பொறுப்பாளர்கள் திருஞானம் (கிழக்கு), தங்கவேல் (மேற்கு) உள்பட 107 பேரை போலீசார் கைது செய்தனர்.

உப்பிலியபுரம் அண்ணா சிலையருகே தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேரையும், ஜீயபுரத்தில் திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அந்தநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிர்வேல் தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதுபோல் மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு சாலையிலும், சமயபுரம் கடை வீதியிலும் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

முசிறி கைகாட்டியில் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 82 பேரையும், தா.பேட்டை கடை வீதியில் தி.மு.க ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர்.சேகரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 64 பேரையும், வாளவந்தி கிராமத்தில் தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 25 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் மணப்பாறை நகர் மற்றும் ஒன்றியப் பகுதியில் பன்னாங்கொம்பு, புத்தாநத்தம், வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியத்தில் துவரங்குறிச்சி, வளநாடு உள்பட பல்வேறு இடங்களிலும் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட மொத்தம் 215 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெறும்பூர் கடைவீதியில் முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி உட்பட 50 பேரையும், காட்டூரில் காட்டுப் பகுதி செயலாளர் நீலமேகம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரையும், பெல் தொ.மு.ச. தொழிற்சங்கத்தை பொது செயலாளர் தீபன் தலைமையில் திருவெறும்பூர் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். மொத்தத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் திருச்சி மாநகரை கடந்து, திருவெறும்பூர் பஸ் நிலையத்தை கடந்து கார் சென்றபோது, 10-க்கும் மேற்பட்ட கார்களில் தி.மு.க.வினர் பின்தொடர்ந்தனர். அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் உதயநிதி ஸ்டாலின் காரை மட்டும் அனுமதிக்கும் வகையில் வழி ஒதுக்கி கொடுத்து, போலீசாரின் வாகனம் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், உதயநிதி ஸ்டாலினை பின்தொடர்ந்த தி.மு.க.வினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து: கரூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல்
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கரூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து: தஞ்சையில், முதல்-அமைச்சர் உருவபொம்மை எரிப்பு - மறியலில் ஈடுபட்ட 110 தி.மு.க.வினர் கைது
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், முதல்-அமைச்சரின் உருவபொம்மையையும் எரித்தனர். இது தொடர்பாக தி.மு.க.வினர் 110 பேர் கைது செய்யப்பட்டனர்.