வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்க அ.தி.மு.க.வினர் உறுதுணையாக இருக்க வேண்டும் - அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தல்


வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்க அ.தி.மு.க.வினர் உறுதுணையாக இருக்க வேண்டும் - அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 21 Nov 2020 5:39 AM GMT (Updated: 21 Nov 2020 5:39 AM GMT)

வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்க அ.தி.மு.க.வினர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார்.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி ஒன்றிய செயலாளர் நீலாபுரம் செல்வம் வரவேற்றார். கூட்டத்தில் உயர் கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறும் இந்த முகாம்களில் அ.தி.மு.க.வினர் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும். இதேபோன்று வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டிய பெயர்கள் இருந்தால் அதனை நீக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி குழுக்களுக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்கி தேர்தல் பணியாற்ற வேண்டும். தமிழக அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள் மற்றும் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்களிடம் எடுத்துக்கூறி ஆதரவு திரட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் அரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன், வேலுமணி, மதிவாணன், செந்தில்குமார், செல்வராஜ், கோபால், விஸ்வநாதன், மகாலிங்கம், பசுபதி சேகர் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி நன்றி கூறினார்.

Next Story