ரேஷன் அரிசி சாப்பாடு வழங்கியதால் வீட்டுக்கு தீ வைத்த ரவுடி
ரேஷன் அரிசி சாப்பாடு வழங்கியதால், வீட்டுக்கு தீ வைத்த ரவுடியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கன்னங்குறிச்சி,
சேலம் கோரிமேட்டை அடுத்த பெரிய கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் கோகுல் (வயது 25). இவர்கள் 2 பேர் மீதும் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சரவணன் காவலாளியாக வேலை செய்து வருகிறார். ரவுடியான கோகுல் வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் கோகுலுக்கு பழைய சாதம் கொடுத்துள்ளார்கள். சாப்பிட்டு விட்டு வெளியே சென்று இரவு திரும்பியபோது மீண்டும் அவருக்கு சாப்பிட ரேஷன் அரிசி சாதம் வழங்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கோகுல், எப்போதும் ரேஷன் அரிசியில் தான் சமைப்பீர்களா? என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் மற்றும் போன்றவற்றை உடைத்தார். மேலும் சரவணனுக்கும், கோகுலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்த கோகுல் வீட்டில் இருந்த சிலிண்டரை திறந்து தீ வைத்தார். இதில் வீடு முழுவதும் தீ பரவியது. இதன் காரணமாக வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாயின. வீடு தீப்பிடித்ததும் சரவணன், கோகுல் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதைப்பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையம் மற்றும் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர். இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல் மற்றும் அவரது தந்தை சரவணனை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story