மாவட்ட செய்திகள்

திருவேங்கடம் அருகே விளையாடியபோது பரிதாபம்: கோவில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலி - நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி சாவு + "||" + Awful while playing near Thiruvenkadam: Boy dies after falling into temple pool - Little girl drowns in swimming pool

திருவேங்கடம் அருகே விளையாடியபோது பரிதாபம்: கோவில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலி - நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி சாவு

திருவேங்கடம் அருகே விளையாடியபோது பரிதாபம்: கோவில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலி - நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி சாவு
திருவேங்கடம் அருகே நண்பர்களுடன் விளையாடியபோது கோவில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலியானான். மேலும், பாளையங்கோட்டையில் உறவினர் வீட்டு நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
திருவேங்கடம்,

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள ஆலமநாயக்கன்பட்டி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 38). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (35). இவர்களுடைய மகன் தர்ஷன் (9). திருவேங்கடத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது லட்சுமி தனது மகனுடன் தாய் ஊரான வரகனூருக்கு சென்று இருந்தார்.

அங்கு தர்ஷன் தனது நண்பர்களுடன் விளையாடுவது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினம் மாலை ஊருக்கு மேற்கே காளியம்மன் கோவில் அருகே உள்ள மலையின் மேலே ஏறுவதும், கீழே வருவதுமாக நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது நிலைதடுமாறி மலையை ஒட்டி அமைந்துள்ள கோவில் தெப்பக்குளத்தில் தர்ஷன் தவறி விழுந்தான். உடனே அவனுடன் விளையாடிய மற்ற சிறுவர்கள் ஊருக்குள் ஓடிச் சென்று தகவல் தெரிவித்தனர். ஆனால் ஊர்மக்கள் வருவதற்குள் சிறுவன் தண்ணீரில் மூழ்கினான். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தெப்பக்குளத்தில் இறங்கி தேடி, சிறுவனை சடலமாக மீட்டனர். அப்போது மகனின் உடலை பார்த்து லட்சுமி கதறி அழுதார். இச்சம்பவம் அங்கு கூடி நின்ற அனைவரையும் கண்கலங்க வைத்தது.

தகவல் அறிந்ததும் திருவேங்கடம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிச் சிறுவன் தெப்பக்குளத்தில் தவறி விழுந்து பலியான சம்பவம் வரகனூர் மற்றும் ஆலமநாயக்கன்பட்டி கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நெல்லை சந்திப்பு வடக்கு பாலபாக்ய நகரை சேர்ந்தவர் என்ஜினீயர் ஷியாம் ஜோயல். இவருடைய மகள் ஆக்சி பிரபா (3). இவர்களது உறவினர் வீடு பாளையங்கோட்டை பெருமாள்புரம் திருநகர் வள்ளுவர் நகரில் உள்ளது.

அங்கு ஷியாம் ஜோயல் குடும்பத்தினருடன் சென்றிருந்தார். நேற்று முன்தினம் மாலையில் ஆக்சி பிரபா உறவினர் வீட்டு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து ஆக்சி பிரபாவை மட்டும் காணவில்லை. அப்போது அவள் அங்குள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி தத்தளிப்பதை கண்டனர். உடனடியாக அவர்கள் ஆக்சி பிரபாவை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால், சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.