தூத்துக்குடியில், மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு வடிகால் திட்டம் மூலம் நிரந்தர தீர்வு - வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி தகவல்


தூத்துக்குடியில், மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு வடிகால் திட்டம் மூலம் நிரந்தர தீர்வு - வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி தகவல்
x
தினத்தந்தி 21 Nov 2020 10:30 PM GMT (Updated: 21 Nov 2020 5:25 PM GMT)

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு வடிகால் திட்டம் மூலம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவழை தொடர்பான ஆய்வு கூட்டம் தமிழக கூடுதல் தலைமைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான பணீந்திரரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி பேசும்போது, ‘தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மூலம் ஆண்டுதோறும் 65 சதவீதம் மழையானது பெறப்படுகிறது. இந்த மழையை பேரிடராக கருதாமல் மழைநீரை சேமிக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள் கொரோனா தொற்று காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டன. அதேபோல் கூடுதல் மழை பொழிவின் போதும் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் சிறப்பாக செயல்பட வேண்டும்’ என்றார்.

பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் மழைநீர் பாதித்த பகுதிகளையும், மழைநீரை வெளியேற்றும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி தபால் தந்தி காலனி, பிரையண்ட் நகர், லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் பெய்த கன மழையில் தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டினம், விளாத்திகுளம் பகுதியில் ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது.

அனைத்து துறைகளும் பேரிடர் காலங்களை சமாளிக்க ஆயத்த நிலையில் இருக்கின்றன. எந்தவிதமான மழை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு எல்லா துறைகளும் இணைந்து செயல்படுவதற்கு ஆயத்த நிலையில் இருக்கின்றன. பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க தேவையான இடங்கள் தயார் நிலையில் உள்ளன. முக்கிய அலுவலர்கள் அங்கு சென்று அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்து உள்ளனர். ஒரு வேளை பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை வந்தால் பொதுமக்களுக்கு தக்க நேரத்தில் தகவலை தெரிவித்து அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.

மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற துரிதமாகவும், தேவையான அளவுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மற்ற நகராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும். அப்போது மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அடுத்த மழை காலத்தில் இந்த பிரச்சினை இருக்காது என எதிர்பார்க்கிறோம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை 22 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உபரியாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. அதனை அகற்றும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த ஆய்வு கூட்டத்தில், உதவி கலெக்டர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி கலெக்டர்கள் விஜயா (கோவில்பட்டி) , தனப்பிரியா (திருச்செந்தூர்), சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் கிருஷ்ணலீலா, அனிதா, மாநகராட்சி நல அலுவலர் அருண்குமார், மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர்கள் பத்மா, அண்ணாத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story