களக்காட்டில் பரபரப்பு: எம்.ஜி.ஆர். உருவப்படம் கல்வீசி உடைப்பு
களக்காட்டில் எம்.ஜி.ஆர். படத்தை கல்வீசி உடைத்ததால் பரபரப்பு நிலவியது.
களக்காடு,
நெல்லை மாவட்டம் களக்காடு நடு தெருவில் தங்கம்மன் கோவில் அருகில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு பீடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பீடத்தில் கண்ணாடி கூண்டுக்குள் எம்.ஜி.ஆர். உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் அ.தி.மு.க. விழாக்களின்போது, இந்த எம்.ஜி.ஆர். படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், எம்.ஜி.ஆர். பீடத்தில் கல்வீசி தாக்கினர். இதில் கண்ணாடி நொறுங்கி விழுந்ததில் எம்.ஜி.ஆர். படம் சேதம் அடைந்தது.
நேற்று காலையில் இதனைப் பார்த்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்து அங்கு திரண்டனர். இதுதொடர்பாக அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ், களக்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
உடனே சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, எம்.ஜி.ஆர். படத்தை சேதப்படுத்திய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். களக்காட்டில் எம்.ஜி.ஆர். படம் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story