காதலித்து திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய என்ஜினீயர் கைது - சென்னையில் பரபரப்பு சம்பவம்


காதலித்து திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய என்ஜினீயர் கைது - சென்னையில் பரபரப்பு சம்பவம்
x
தினத்தந்தி 21 Nov 2020 11:47 PM GMT (Updated: 21 Nov 2020 11:47 PM GMT)

சென்னையில் கல்லூரி மாணவிகளை காதலித்து, திருமண ஆசைகாட்டி அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய என்ஜினீயர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சென்னை,

கைது செய்யப்பட்ட அந்த என்ஜினீயரின் பெயர் அருண் கிறிஸ்டோபர் (வயது 25). சென்னை தண்டையார் பேட்டை, முத்தமிழ் நகரைச் சேர்ந்த இவர் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். மின்சார வாரியத்தில் தற்காலிகமாக வேலை செய்து வந்தார். விமான பைலட்டாக வேலை செய்வதாக இவர் சொல்லி வந்தார். இவர் இணையத்தில் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அழகிய இளம்பெண்களுக்கு காதல் வலை வீசுவார். தனது வலையில் விழும் இளம்பெண்களை, உன்னை திருமணம் செய்ய துடிக்கிறேன், உனது அந்தரங்க ஆபாச படங்களை அனுப்பு என்று வற்புறுத்துவார்.

அவரது ஆசை வார்த்தையை நம்பி ஏராளமான இளம்பெண்கள் தங்களது அந்தரங்க ஆபாச படங்களை இவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர் அந்த படங்களை பார்த்து ரசித்து வந்துள்ளார். இவரது இந்த வித்தியாசமான காதல் விளையாட்டில் சிக்கியவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவிகள்.

இவரது இந்த கொடூர காதல் விளையாட்டில் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மாட்டினார். அவரது அந்தரங்க ஆபாச படங்களை பார்த்து ரசித்த அருண் கிறிஸ்டோபர் ஒரு நூதன மிரட்டலில் ஈடுபட்டார். அந்த மாணவியின் தோழிகளின் செல்போன் எண்களை கேட்டு தொல்லை கொடுத்தார். அதன் மூலம் தோழிகளின் அந்தரங்கத்தையும் பார்க்க துடித்தார்.

இதற்கு அந்த கல்லூரி மாணவி மறுப்பு தெரிவித்தார். செல்போன் எண்களை தராவிட்டால், உனது அந்தரங்க ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டினார். அவரது மிரட்டலில் பயந்துபோன அந்த கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுபற்றி தனது தந்தையான கல்லூரி பேராசிரியரிடம் சொல்லி, குறிப்பிட்ட கல்லூரி மாணவி கதறி அழுதுள்ளார். காம கொடூர என்ஜினீயர் அருண் கிறிஸ்டோபர் மீது அடையாறு துணை போலீஸ் கமிஷனர் விக்ரமனிடம் புகார் கொடுக்கப்பட்டது.

துணை கமிஷனர் விக்ரமன் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அடையாறு சைபர் கிரைம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள். என்ஜினீயர் அருண் கிறிஸ்டோபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இது போல இளம்பெண்களின் வாழ்க்கையில் விளையாடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை கமிஷனர் விக்ரமன் எச்சரித்துள்ளார். இதுபோன்ற பிரச்சினைகளை சந்திப்பவர்கள் தயக்கம் காட்டாமல் தனது செல்போன் எண் 87544-01111-ஐ தொடர்பு கொண்டு பேசலாம் என்றும், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் கொடுப்பவர்களின் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும், துணை கமிஷனர் விக்ரமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Next Story