சென்னையில் 902 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு-திருத்த முகாம் - இன்றும் நடக்கிறது
சென்னையில் 902 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு-திருத்தம் செய்யும் முகாம்கள் நேற்று நடந்தது. இன்றும் முகாம் நடைபெறுகிறது.
சென்னை,
சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் 6.10 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றனர். சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியலில் 39 லட்சத்து 40 ஆயிரத்து 704 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
புதிய வாக்காளர்களை சேர்க்கும் விதத்திலும், வாக்காளர் அடையாள அட்டைகளில் திருத்தம் செய்துகொள்ள ஏதுவாகவும் சென்னையில் நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான ஜி.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.
அதன்படி, சென்னையில் உள்ள 902 வாக்குச்சாவடி மையங்களில் முதற்கட்டமாக வாக்காளர் பெயர் சேர்ப்பு-திருத்த முகாம்கள் நேற்று நடந்தது.
இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2021 அன்று 18 வயது நிறைவு அடைபவர்கள் (1.1.2003-ந் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) படிவம் 6-ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8ஏ-ஐ பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலை இணைத்தும் பொதுமக்கள் வழங்கினர்.
இதுதவிர அரசியல் கட்சிகள் சார்பிலும் வாக்குச்சாவடி மையங்கள் அருகே விண்ணப்பங்கள் வினியோகம் நடந்தன. இதுதவிர www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் வாக்காளர்கள் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பித்தனர்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. மேலும் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிப்பது தொடர்பான பல்வேறு விளக்கங்களையும் பொதுமக்கள் பெற முகாம்கள் ஏதுவாக அமைந்தன.
வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.
Related Tags :
Next Story