தொழில் போட்டியில் முன்விரோதம்: மதுரை ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த 3 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்
தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மதுரை ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆண்டிப்பட்டி,
மதுரை மேலப்பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் நாகு என்ற நாகேந்திரன்(வயது 48). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனுர் பகுதியில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று முன்தினம் நாகேந்திரன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணதேவேந்திரன், சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுல்தான் பாட்சா ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் உசிலம்பட்டி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் நாகேந்திரனை கொலை செய்தது, மதுரையை சேர்ந்த உமாசங்கர் (48), உசிலம்பட்டி அருகே உள்ள அன்னமார்பட்டியை சேர்ந்த சாய்பிரசாத் (40), விக்கிரமங்கலம் அருகே உள்ள அய்யம்பட்டியை சேர்ந்த சுரேஷ்பாண்டியன் (40) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களின் செல்போன் எண் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அதில் அவர்கள் 3 பேரும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் இருப்பது தெரியவந்தது. எனவே தனிப்படை போலீசார் திண்டுக்கல் மாவட்ட போலீசாரின் உதவியுடன் கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கொலையாளிகள் 3 பேரும் நிலக்கோட்டையில் காரில் சென்றபோது அவர்களை போலீசார் ஜீப்பில் விரட்டிச்சென்று பிடித்து கைது செய்தனர். மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் கைதான 3 பேரையும் போலீசார், ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் வெளியான பரபரப்பு தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-
ரியல் எஸ்டேட் அதிபர் நாகேந்திரனுக்கும், கைதான 3 பேருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்தது. இதனால் அவர்கள் நாகேந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி கடந்த 19-ந்தேதி உமாசங்கர், நாகேந்திரனை மதுகுடிக்க மதுரை காளவாசல் பகுதியில் உள்ள ஒரு மதுபான பாருக்கு அழைத்து சென்றார். அப்போது அவர்களுடன் சாய்பிரசாத் மற்றும் சுரேஷ்பாண்டியனும் சேர்ந்து கொண்டனர். அங்கு அவர்கள் 4 பேரும் மதுகுடித்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் காரில் ஏறி தேனி சாலையில் சென்றனர். காரை உமாசங்கர் ஓட்டினார். ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் வந்த போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து திம்மரசநாயக்கனூருக்கு வந்த போது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, உமாசங்கர், சாய்பிரசாத், சுரேஷ்பாண்டியன் ஆகிய 3 பேரும் சேர்ந்து நாகேந்திரனை தாக்கினர். அப்போது சுரேஷ்பாண்டியன் நாகேந்திரனின் கழுத்தை துண்டால் நெரித்தார். இதில் நாகேந்திரன் மயங்கிவிழுந்தார். அதன்பின்னர் 3 பேரும் சேர்ந்து நாகேந்திரனின் கழுத்தை அறுத்து கொலை செய்து சாலையோரம் உடலை வீசிவிட்டு சென்று உள்ளனர். திம்மரசநாயக்கனூர் போலீஸ் சோதனை சாவடியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கடந்த 19-ந்தேதி நள்ளிரவு அவர்கள் கார் வந்த காட்சி பதிவாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் உமாசங்கர், சாய் பிரசாத் ஆகிய இருவரும் ஏற்கனவே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 2018-ம் ஆண்டு விடுதலையானவர்கள் ஆவார்கள். இவ்வாறு போலீசார் கூறினர்.
பின்னர் கைதான 3 பேரும் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் கொலையாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை தேனி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன் பாராட்டினார்.
Related Tags :
Next Story