மாவட்ட செய்திகள்

2-வது நாள் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கைது:மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் + "||" + Involved in the 2nd day campaign Udayanidhi Stalin arrested In the district DMK party road blockade

2-வது நாள் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கைது:மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல்

2-வது நாள் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கைது:மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல்
2-வது நாளாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல், 

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நேற்று முன்தினம் திருக்குவளையில் சட்ட சபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கைதானார். பின்னர் விடுதலையான அவர், 2-வது நாளாக நேற்று நாகை துறைமுகத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதையடுத்து போலீசார் அவரை மீண்டும் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து திண்டுக்கல்லில், கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் அவைத்தலைவர் பசீர் அகமது, மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி, தலைமை செயற்குழு உறுப்பினர் காந்திராஜன், நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் நகர, ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணியினர் பெரியார் சிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது பஸ் நிலையம் அருகே ஏ.எம்.சி. சாலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தி.மு.க.வினர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் ஈடுபட்ட தி.மு.க. பெண் நிர்வாகிகள் 5 பேர் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் நிலக்கோட்டை நால்ரோட்டில் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்தரபாண்டியன், நகர செயலாளர் கதிரேசன் மற்றும் நிர்வாகிகள், உதயநிதி ஸ்டாலின் கைதானதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்ததும், நிலக்கோட்டை போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர்.

வேடசந்தூர் ஆத்துமேட்டில் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன், நகர செயலாளர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 76 பேரை போலீசார் கைது செய்தனர். குஜிலியம்பாறையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேர், எரியோட்டில் மறியலில் ஈடுபட்ட 45 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 329 பேரை போலீசார் கைது செய்தனர்.