வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Nov 2020 8:39 AM IST (Updated: 22 Nov 2020 8:39 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது. அதை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கோவை,

தமிழகம் முழுவதும் கடந்த 16-ந் தேதி வரைவு வாக்காளர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் கோவை மாவட்டத்தில் 14,68, 222 ஆண் வாக்காளர்கள், 15,02, 142 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர் 369 என மொத்தம் 29 லட்சத்து 70 ஆயிரத்து 733 வாக் காளர்கள் உள்ளனர். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் பிழை திருத்தம் செய்ய பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி 1.1.2021-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், முகவரி மாற்றம் மற்றும் பிழைகள் திருத்தம் செய்ய வசதியாக மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர்.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிந்த அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வாக்காளர்கள் என அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர். அனைவருக்கும் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட் டனர். பின்னர், ஒருவர் பின் ஒருவராக வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை சரிபார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

ஒருசில வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய விண்ணப்பித்தனர். வீடு மாறி சென்றவர்கள் முகவரி மாற்றத்திற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தனர். இந்த சிறப்பு முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளி, புலியகுளம் மாநகராட்சி பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பெயர் பட்டியல் சிறப்பு முகாமை கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 12 மற்றும் 13-ந் தேதி ஆகிய நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்து கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

நேற்று நடைபெற்ற முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ன் மூலம் 18,081 விண்ணப்பங்களும், பதிவினை நீக்கம் செய்ய படிவம் 7-ன் மூலம் 1,239 விண்ணப்பங்களும், ஏற்கெனவே உள்ள பதிவில் திருத்தம் செய்ய படிவம் 8-ன் மூலம் 1,449 விண்ணப்பங்களும், ஒரே சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடி பெயர்ந்தவர்கள் படிவம் 8ஏ-ன் மூலம் 1, 449 விண்ணப்பங்களும் என மொத்தம் 22,989 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

Next Story