ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 75 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை


ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 75 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை
x
தினத்தந்தி 22 Nov 2020 8:45 AM IST (Updated: 22 Nov 2020 8:45 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 75 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர்.

ஊட்டி, 

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளதால் மலைமாவட்டமான நீலகிரிக்கு வர இ-பாஸ் தளர்த்தப்பட்டு, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகிய பூங்காக்கள் திறந்து செயல்பட்டு வருவதால், இங்கு சுற்றுலா பயணிகளை அதிகளவில் பார்க்க முடிகிறது.

குறிப்பாக வார விடுமுறை நாட்களில் வருகை அதிகரித்து காணப்படுவதால் நடைபாதை வியாபாரிகள், சுற்றுலா தொழிலாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் பூங்காக்கள் திறக்கப்பட்டன.

இதுவரை சுற்றுலா பயணிகள் 75 ஆயிரம் பேர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்து உள்ளனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், சரியான முறையில் முககவசம் அணியவும் பணியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். வருகிற நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story