விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு


விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Nov 2020 9:35 AM IST (Updated: 22 Nov 2020 9:35 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 1,957 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் 1.1.2021 தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி கடந்த 16-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1,957 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் மேற்கொள்தல் உள்ளிட்டவை தொடர்பாக உரிய படிவத்தில் கோரிக்கை மனுக்களை வாக்குச்சாவடி அமைவிட நியமன அலுவலரிடம் கொடுத்தனர். இம்முகாமில் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் பலர் தங்களுடைய பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக படிவத்துடன் வயதிற்கான ஆதாரமாக உரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பித்தனர்.

விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, தாசில்தார்கள் விழுப்புரம் வெங்கடசுப்பிரமணியன், விக்கிரவாண்டி தமிழ்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக்லத்தீப் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story