வேளாண் அதிகாரிகளின் செயல்பாடு திருப்தியாக இல்லை - குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். அப்போது விவசாயிகள், கோரிக்கைகள் குறித்து பேசியதாவது.
விழுப்புரம்,
கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு தொகை இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. அதனை கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல், உளுந்து, எள் போன்றவற்றின் விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய வேண்டும். திருவாமாத்தூர் ஏரியின் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய 2 தாலுகாவிற்குட்பட்ட 40 கிராமங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனத்தினர் தொடங்கியுள்ளனர். அவர்கள் அங்கிருக்கிற விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சந்தைமதிப்புக்கு ஏற்ப இழப்பீட்டு தொகையை பெற்று தர வேண்டும்.
உளுந்து பயிரில் பூச்சிநோய் தாக்குதல் அதிகம் உள்ளது. அதிலிருந்து பயிர்களை காப்பாற்ற வேளாண் அதிகாரிகள் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் அதிகாரிகள் இருக்கிறார்களா? இல்லையா? அவர்களின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. தங்கமலை ரகசியமாகவே இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் பயோ-மெட்ரிக் வருகை பதிவேடு முறையை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதனை தொடர்ந்து கலெக்டர் அண்ணாதுரை பேசுகையில், வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு போதிய அளவில் பெய்யுமோ? பெய்யாதோ என்ற சந்தேகம் உள்ளது. எனவே இம்மாதம் 30-ந் தேதிக்குள் அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்யுங்கள் என்றார். கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் ராஜசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவஹர், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story