வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் - ஆய்வுக்கூட்டத்தில் பார்வையாளர் வள்ளலார் அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வள்ளலார் அறிவுறுத்தினார்.
தர்மபுரி,
இந்திய தேர்தல் ஆணையத்தின்உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பான பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் பால் உற்பத்தி, பால் பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் வள்ளலார் தலைமை தாங்கினார். கலெக்டர் கார்த்திகா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வள்ளலார் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் 856 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 1,478 வாக்குச்சாவடிகளில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பதிவுகளை சரிபார்த்து கொள்ளலாம். தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் டிசம்பர் மாதம் 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 1.1.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் 22-ந்தேதி (இன்று) மற்றும் வருகிற டிசம்பர் மாதம் 12, 13-ந்தேதி ஆகிய நாட்களில் நடக்கும் சிறப்பு முகாமில் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியல் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும்போது கண்டிப்பாக இறப்பு சான்றிதழ் மற்றும் பதிவேடுகளை சரிபார்த்து நகல் இணைக்க வேண்டும். வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசியல் கட்சி பிரதிநிதிகளும், அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து முழுமையான வாக்காளர் பட்டியலை தயார் செய்ய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர்கள் பிரதாப், தணிகாசலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, கலால் உதவி ஆணையர் தேன்மொழி, தனிதுணை கலெக்டர் இளவரசி, தேர்தல் தாசில்தார் பாலமுருகன், அனைத்து தாசில்தார்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக அவர் பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, அளேதர்மபுரி ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story