தி.மு.க. பிரசாரத்தை கண்டு அ.தி.மு.க. பயப்படுகிறது நாகையில், 2-வது நாளாக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் பேட்டி


தி.மு.க. பிரசாரத்தை கண்டு அ.தி.மு.க. பயப்படுகிறது நாகையில், 2-வது நாளாக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 22 Nov 2020 11:07 AM IST (Updated: 22 Nov 2020 11:07 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. பிரசாரத்தை கண்டு அ.தி.மு.க. பயப்படுகிறது என்று நாகையில், 2-வது நாளாக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டம் திருக்குவளையில் நேற்று முன்தினம் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். கலைஞர் கருணாநிதியின் நினைவு இல்லம் எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பிரசாரம் செய்த தொடங்கிய சிறிது நேரத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளை கைது செய்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இறுதியாக வேளாங்கண்ணியில் முதல் நாள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கு நடந்த தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, இளைஞர் அணி நிர்வாகிகள் அதிக அளவில் இணையதளத்தை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் வாட்ஸ்-ஆப் குழுக்களை உருவாக்கி அதில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வாட்ஸ்-ஆப் மூலம் அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத கொள்கையை பொதுமக்களுக்கு தெரியபடுத்த வேண்டும். இதன் மூலம் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை முதல்வர் அரியணையில் அமரவைக்க முடியும் என்றார். கூட்டத்தை முடித்துக்கொண்டு அவர் வேளாங்கண்ணியில் உள்ள விடுதியில் இரவு தங்கினார்.

நேற்று அவர் தனது 2-வது நாள் பிரசாரத்தை தொடங்கினார். வேளாங்கண்ணியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த மீனவ பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அங்குள்ள மீனவர்கள், மீன் வியாபார பெண்கள் என அனைவரையும் சந்தித்து அவர்களின் குறைகளையும், தொழிலில் உள்ள சிரமங்களையும் கேட்டறிந்தார். தொடர்ந்து மீனவர்களுக்கான உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

இதையடுத்து மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு விசைப்படகில் ஏறி கடல் முகத்துவாரம் வரை பயணம் செய்தார். தொடர்ந்து சிறிது தூரம் விசைப்படகை ஓட்டினார். விசைப்படகில் பயணம் செய்தபோது உடன் வந்த மீனவர்களிடம் மீன் பிடி தொழிலில் உள்ள சிரமங்கள், டீசல் மானியம் போதுமான அளவிற்கு கிடைக்கிறதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டறிந்தார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக படகில் பயணித்த அவர் மீண்டும் துறைமுகத்தை வந்தடைந்தார்.

அப்போது படகில் அமர்ந்தவாறு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரம்மாண்ட கூட்டங்களை நடத்தி பீகார் தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா மோடி ஆகியோர் கலந்து கொண்டார்கள். அவர்களை யாரும் கைது செய்யவில்லை. அவர்களது பிரசாரமும் தடை செய்யப்படவில்லை. ஆனால் தி.மு.க. பிரசாரம் செய்தால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் என்று கூறி பிரசாரத்திற்கு தடை செய்கின்றனர்.

அவர்கள் பிரசாரம் செய்தால், கூட்டத்தை கூட்டினால் கொரோனாவைரஸ் பரவாதா? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு கூட்டம் என்ற பெயரில் பிரசாரம் செய்கிறார். தி.மு.க.வின் பிரசாரத்தை தடுக்க வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது என்றார்.

பின்னர் அவர் படகில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் சூப்பிரண்டுகள் ஓம் பிரகாஷ் மீனா, துரை ஆகியோர் தலைமையிலான போலீசார், உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதாக கூறினர். இதனைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மட்டும் தனது பிரசார வாகனத்தில் ஏறினார். வாகனத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு அரணாக நின்று கொண்டு அவரை திருமண மண்டபத்தில் தங்க வைப்பதற்காக அழைத்து சென்றனர்.

துறைமுகத்தை விட்டு வெளியே வரும்போது அங்கு நின்ற மீனவர்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் ஒன்று திரண்டு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளை கைது செய்ய விடமாட்டோம் என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குள் மற்றொரு பிரிவினர் அக்கரைப்பேட்டை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிரசார வாகனத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் கீழே இறக்கி விடப்பட்டார். பின்னர் அவர் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார். அவருடன் தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ.க்.கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மதிவாணன், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பைந்தமிழ் பாரி, முன்னாள் எம்.பி. விஜயன், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், துணைச்செயலாளர் மனோகரன், கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோர் நண்பகல் 12.30 மணி அளவில் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

அப்போது வேனில் இருந்தபடி உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவல்துறை எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் எங்களது பிரசாரம் தொடரும். தி.மு.க.வின் பிரசாரத்திற்கு மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு உள்ளது. நான் சென்ற இடம் எல்லாம் மக்கள் நல்ல எழுச்சியோடு வரவேற்றனர். இது ஆட்சி மாற்றத்திற்கான வரவேற்பு. தி.மு.க.வின் பிரச்சாரத்தை ஒடுக்கவே ஆளும் அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

நேற்று முன்தினம் பிரசாரத்தை தொடங்கியபோதும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டேன். இன்று உலக மீனவர் தினம் என்பதால் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து மீனவர்களை சந்திக்கலாம், அவர்களுடைய குறைகளைக் கேட்கலாம் என்று வந்துள்ளேன். இப்போது 2-வது நாளாக என்னை கைது செய்துள்ளனர். தி.மு.க. பிரசாரத்தை கண்டு அ.தி.மு.க. பயப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை போலீசார் இரவு 8 மணிக்கு விடுவித்தனர். விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

நேற்று பிரசாரம் தொடங்கியவுடனேயே எங்களை போலீசார் கைது செய்தனர். அது போலவே இன்றும் கைது செய்துள்ளனர். எங்களைப் பார்க்க வேண்டும், பேச்சைக் கேட்க வேண்டும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதைப்பார்த்து சகிக்க முடியாத அ.தி.மு.க. அரசு பிரசாரத்திற்கு இடையூறு செய்து வருகிறது. கைது நடவடிக்கைகள் எடுத்தாலும் பிரசாரம் தொடரும். தொடர்ந்து இடையூறு செய்தால் தி.மு.க. கண்டிப்பாக நீதிமன்றத்துக்கு செல்லும். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளது. இது தேர்தலில் வெற்றிபெற எங்களுக்கு சுலபமாக இருக்கும். அ.தி.மு.க. அரசின் ஊழல் பட்டியல் பா.ஜ.க. கையில் இருக்கிறது. அதற்கு பயந்துதான் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது என்றார்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சிக்கல், நாகூர், பால்பண்ணைச்சேரி, பனங்குடி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். இரவு தனது தாயார் ஊரான சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் தங்கினார்.

Next Story