நோயால் பாதிக்கப்பட்ட தந்தை-சேதம் அடைந்த வீடு: மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்த மாணவியின் சோகம்
மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்த மாணவியின் தந்தை நோயால் அவதி அடைந்து வருகிறார். மேலும் அவர் வசிக்கும் வீடும் சேதம் அடைந்துள்ளது.
அரிமளம்,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேந்தாகுடி கிராமத்தை சேர்ந்த டீக்கடை தொழிலாளி பழனிவேலு-சந்திரா தம்பதியின் மூத்த மகள் புவனேஸ்வரி. இவர் அரசு பள்ளி மாணவர்களுக்கான முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் தேர்வானார். இவருக்கு வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
இது குறித்து மாணவி புவனேஸ்வரி தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-
எனது தாத்தா சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற பணமின்றி இறந்துவிட்டார். அப்போது எனது தாத்தா என்னிடம், நீ மருத்துவராகி கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றார். அதன்படி படித்து நல்ல மதிப்பெண் எடுத்தேன். தற்போது, மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனது தந்தை டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு முதுகு தண்டுவட பிரச்சினை ஏற்பட்டதாலும், கொரோனா தொற்று பரவி வருவதாலும் தற்போது வேலைக்கு செல்வதில்லை. அங்கன்வாடி உதவியாளராக பணியாற்றும் எனது தாய் மற்றும் தப்பி கூலிவேலைக்கு சென்று எங்களது குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். எனக்கு 3 தங்கைகள் உள்ளனர். அனைவரும் பள்ளியில் படித்து வருகின்றனர்.
கஜா புயலால் சேதமடைந்த வீடு
நாங்கள் குடியிருக்கும் ஓட்டு வீடு எங்களுடைய தாத்தாவிற்கு சொந்தமானது. அந்த வீடும் கடந்த கஜா புயலில் சேதம் அடைந்தது. அந்த வீட்டை சீர் செய்ய கூட எங்களிடம் பணம் இல்லை. ஆதலால் சேதமடைந்த பகுதியை தார்ப்பாய் போட்டு கட்டி அதில் வசித்து வருகிறோம். தந்தைக்கு முதுகுதண்டு பிரச்சினை இருப்பதால் அதற்காக சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது.
இந்தநிலையில் அரசு படிப்பு செலவை ஏற்றுகொள்வதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ரூ.50 ஆயிரம் நிதி உதவி அளித்தார். அதற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் நான் பயின்ற அரிமளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் மற்றும் ஆசிரியர்களும் எனக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். இது எனக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. தாத்தாவின் ஆசைப்படி மருத்துவராகி கிராமப்புற ஏழை எளிய மக்களுக்காக பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story