உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து 2-வது நாளாக தி.மு.க.வினர் மறியல்


உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து 2-வது நாளாக தி.மு.க.வினர் மறியல்
x
தினத்தந்தி 22 Nov 2020 11:18 AM GMT (Updated: 22 Nov 2020 11:18 AM GMT)

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திருச்சியில் 2-வது நாளாக தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி,

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக தேர்தல் பிரசாரத்தை மீண்டும் தொடங்கிய நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம் கோபுரவாசல் முன்பும், திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை முன்பும் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 140 பேரை போலீசார் கைது செய்தனர்.

965 பேர் கைது

இதுபோல், புள்ளம்பாடி கத்தரிபள்ளம் ஏரி அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் லால்குடி தொகுதி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் தலைமையில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் லால்குடி, மணிகண்டம், தொட்டியம், முசிறி, உப்பிலியபுரம், தா.பேட்டை, மண்ணச்சநல்லூர் என்று மாவட்டத்தின் புறநகர் பகுதியில் 13 இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்டதாக மொத்தம் 825 தி.மு.க.வினரை மாவட்ட போலீசார் கைது செய்தனர். மொத்தத்தில் திருச்சி மாவட்டத்தில் சாலைமறியலில் ஈடுபட்டதாக 965 பேரை போலீசார் கைது செய்து அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story