ரப்பர் தோட்டத்தில் பதுக்கிய 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் போலீஸ் விசாரணை


ரப்பர் தோட்டத்தில் பதுக்கிய 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 22 Nov 2020 11:49 AM GMT (Updated: 22 Nov 2020 11:49 AM GMT)

நட்டாலம் அருகே ரப்பர் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

களியக்காவிளை,

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, கண்காணித்து வருகிறார்கள். அப்படி இருந்தும் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது தினமும் நடந்து வருகிறது.

கடந்த 19-ந்தேதி பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வாணியக்குடி பகுதியில் 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் களியக்காவிளை அருகே ஆட்டோவில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பிடிபட்டது.

1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

இந்தநிலையில் நட்டாலம் அருகே கல்லுக்கூட்டம் பகுதியில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் ரப்பர் தோட்டத்துக்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 47 மூடைகளில் 1,350 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காப்புக்காடு குடோனில் ஒப்படைத்தனர். ரப்பர் தோட்டத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர் யார்? என்பதை கண்டுபிடிக்க வருவாய்த்துறை அதிகாரி மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story