உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட 348 தி.மு.க.வினர் கைது


உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட 348 தி.மு.க.வினர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2020 6:29 PM IST (Updated: 22 Nov 2020 6:29 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் 2-வது நாளாக மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வை சேர்ந்த 348 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை, 

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினமும் தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி சிவகங்கை நகர கழக செயலாளர் துரைஆனந்த் தலைமையில் சிவகங்கை அரண்மனை வாசலில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் கே.எஸ்.எம்.மணிமுத்து, வடக்கு ஒன்றிய செயலாளர் ஆ.முத்துராமலிங்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.ஜெயராமன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சேதுபதிராஜா உள்பட 51 பேரை சிவகங்கை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி

காரைக்குடி பெரியார் சிலை பகுதியில் தி.மு.க. நகர செயலாளர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் காரைக்குடி அருகே கோவிலூரில் கல்லல் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட இலக்கிய அணி தலைவர் புலிக்குட்டி சீனிவாசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பரணி கிட்டு, மகளிரணி அமைப்பாளர் கலாகாசிநாதன், ஒன்றிய பொருளாளர் பழனியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு, இலக்கிய அணி துணை அமைப்பாளர் முத்துராமன் உள்பட 50 பேரை குன்றக்குடி போலீசார் கைது செய்தனர்.

மானாமதுரை

மானாமதுரை தேவர்சிலை பகுதியில் நேற்று யூனியன் துணைத்தலைவர் முத்துச்சாமி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராஜாமணி, ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, மீனவரணி பாஸ்கரன், தொண்டரணி மூர்த்தி உள்ளிட்ட தி.மு.க.வினரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திருப்புவனத்தில் மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் திருப்புவனம் பிள்ளையார்கோவில் அருகே மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். இளையான்குடி கண்மாய்கரை பகுதியில் ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுப.மதியரசன், நகர செயலாளர் நஜீமுதீன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திருப்பத்தூர் போலீஸ் நிலையம் அருகில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் உதயசண்முகம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் சாக்ளா, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சோமசுந்தரம் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிங்கம்புணரி

சிங்கம்புணரியில் தி.மு.க.வினர் 4 ரோடு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் படுத்தும், அமர்ந்து கொண்டும் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த மறியல் போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து, சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியலில் துணை ஒன்றியச்செயலாளர் சிவபுரி சேகர், நகர பொருளாளர் கதிர்வேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கதிர்காமம், ஒன்றிய பொருளாளர் மனப்பட்டி பாஸ்கரன், இளைஞர் அணி மனோகரன், குடோன் சுப்பிரமணியன் உள்பட 38 பேரை சிங்கம்புணரி போலீசார் கைது செய்தனர்.

348 பேர் கைது

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தி.மு.க.வை சேர்ந்த 348 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

Next Story