பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறப்பு


பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 22 Nov 2020 7:23 PM IST (Updated: 22 Nov 2020 7:23 PM IST)
t-max-icont-min-icon

பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆதலால் தற்போது விவசாய பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து மதகு வழியாக தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. கடந்த சில நாட்களாக வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு மட்டும் 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

கூடுதலாக தண்ணீர்

இந்நிலையில் தற்போது அணைக்கு நீர்வரத்து 275 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனத்திற்காக கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட நத்தம்பட்டி வரை விவசாய பாசனத்திற்காக செல்கிறது. பிளவக்கல் அணையில் இருந்து நேரடியாக 40 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதில் 13 கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

மீதமுள்ள 27 கண்மாய்கள் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளது. இதில் சில கண்மாய்கள் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அதன் முழு கொள்ளளவையும் எட்டும் நிலையில் உள்ளது. ஆதலால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

Next Story