துபாயில் இருந்து மதுரைக்கு ரூ.53¾ லட்சம் தங்கத்தை விமானத்தில் கடத்தி வந்த 2 பெண்கள்


துபாயில் இருந்து மதுரைக்கு ரூ.53¾ லட்சம் தங்கத்தை விமானத்தில் கடத்தி வந்த 2 பெண்கள்
x
தினத்தந்தி 22 Nov 2020 8:17 PM IST (Updated: 22 Nov 2020 8:17 PM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் ரூ.53¾ லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த 2 பெண்கள் பிடிபட்டனர்.

மதுரை, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளுக்கான விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு, ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் விமானத்தில் இந்தியா அழைத்து வருகிறது.

அந்த வகையில் துபாய், சிங்கப்பூர், அபுதாபி, லெபனான், மாலத்தீவு, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள் விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வெளி நாடுகளில் இருந்து இதுவரை மதுரைக்கு 108 விமானங்கள் வந்துள்ளன.

அதில் 14 ஆயிரத்து 952 பயணிகள் மதுரை வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனையுடன், சுங்கத்துறையினரின் சோதனையும் நடக்கிறது. இந்த சோதனைகளுக்கு பிறகே அவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கடத்தல் தங்கம்

இந்த நிலையில், துபாயில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மதுரைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக மதுரை சுங்கப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கப்புலனாய்வு துறை துணை கமிஷனர் ஜெய்சன்பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.

அப்போது அந்த விமானத்தில் 2 பெண்களின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது உடைமைகளும் சோதனை செய்யப்பட்டன. அப்போது, கருப்பு நிறத்திலான பிளாஸ்டிக் பையில் களிமண் போன்ற பொருள் இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணை

இதுகுறித்து துணை கமிஷனர் ஜெய்சன் பிரவீன்குமார் கூறும்போது, “சந்தேகத்தில் அடிப்படையில் 2 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் களிமண் போன்ற பொருளுடன் தங்கத்துகள்களை கலந்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பிடிபட்டுள்ள தங்கத்தின் மொத்த எடை 1 கிலோ 5 கிராம். அதன் மதிப்பு ரூ.53 லட்சத்து 80 ஆயிரத்து 403 ஆகும். களிமண் போன்ற பொருளுடன் தங்கத்தை கலந்து கொண்டு வந்தால், அதனை பிரித்தெடுக்க நீண்ட நேரமாகும். மேலும் அது சோதனையிலும் கண்டுபிடிக்கமுடியாது என்பதை அறிந்து அவ்வாறு கடத்தி வந்துள்ளார்கள். பிடிபட்டவர்களிடம் இதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றார். 

Next Story